சைக்கிள் பந்தய வீராங்கனைகளுக்கு ரூ.32 லட்சத்தில் சைக்கிள்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சர்வதேச சைக்கிள் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சி பெற்று வரும் தமிழக சைக்கிள் பந்தய வீராங்கனைகள் 2 பேருக்கு ரூ.32 லட்சத்தில் சைக்கிள்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு, மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தவும், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கவும், விளையாட்டு சூழலை உருவாக்கிடவும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அரசிற்கும், பங்குதாரர்களுக்கும் இடையில் தடையற்ற ஒருங்கிணைப்பை அடைவதற்கும், பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்து பெறக்கூடிய நன்மைகளைப் பயன்படுத்துவதற்கும், "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை" என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டு கடந்த மே 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை நிர்வகிக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 7 பேர் கொண்ட குழு செயல்பட்டு வருகிறது.
ரூ.32 லட்சம் மதிப்பில்...
இந்தநிலையில், இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி முகாம்களில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சர்வதேச அளவிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் தமிழகத்தை சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனை எஸ்.தன்யதா மற்றும் கவுகாத்தியில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் சைக்கிள் பந்தய வீராங்கனை அ.ஜெய்.ஜியோட்ஷ்னா ஆகிய இருவரும் சர்வதேச அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சி பெற்று வருகின்றனர்.
அவர்கள் இருவரின் பயிற்சி பயன்பாட்டிற்காக தலா ரூ.16 லட்சம் வீதம் மொத்தம் ரூ.32 லட்சம் மதிப்பிலான நீண்ட தூரம் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள 2 சைக்கிள்களை "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை" நிதியில் இருந்து தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.