பொழுதுபோக்கு மையம் அமைக்க ரூ.1 கோடியே 96 லட்சத்துக்கு ஏலம்
தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி பொழுதுபோக்கு அமையம் அமைப்பதற்கு ரூ.1 கோடியே 96 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா வருகிற 18-ந்தேதி கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி கோவில் அருகே உள்ள இடத்தில் குழந்தைகள் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் மகிழ்விக்கும் ராட்டினங்கள், மாயாஜாலம், சர்க்கஸ் போன்ற பொழுதுபோக்கு மையம் அமைக்கப்படும். இதற்கான ஏலம் நேற்று கோவில் அலுவலகத்தில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி தலைமையில் நடைபெற்றது. அதில் ராட்டினம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ரூ.1 கோடியே 96 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. இது கடந்த ஆண்டு ரூ.1 கோடியே 36 லட்சத்து 700-க்கு விடப்பட்டது. இது தவிர உணவகம் வைக்க ரூ.25லட்சத்து 100-க்கும், கண்மலர் விற்பனைக்கு ரூ.4 லட்சத்திற்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் ஆய்வாளர் தியாகராஜன், கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, மேலாளர் பாலசுப்பிரமணியன், கணக்கர் பழனியப்பன், கோவில் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.