பெருந்தொழில் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி.யை சரிவர செலுத்துவதில்லை: முதன்மை தலைமை கமிஷனர் தகவல்
அதிகளவில் ஆண்டு வருவாய் ஈட்டக்கூடிய பெருந்தொழில் நிறுவனங்கள் சரிவர ஜி.எஸ்.டி.யை செலுத்துவதில்லை என்று ஜி.எஸ்.டி. முதன்மை தலைமை கமிஷனர் மண்டலிகா ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை தொழில் வர்த்தகசபை சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) குறித்த 2 நாள் கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஓட்டலில் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கை மத்திய கலால் மற்றும் சரக்கு சேவைவரி முதன்மை தலைமை கமிஷனர் மண்டலிகா ஸ்ரீனிவாஸ் தொடங்கி வைத்தார்.
சென்னை தொழில் வர்த்தகசபை-ஜி.எஸ்.டி. குழு தலைவர் வைத்தீஸ்வரன், முன்னாள் தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம், இணைத் தலைவர் கோபகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 5 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. நடைமுறையில் உள்ள நிலையில் அதில் உள்ள நன்மைகள், சவால்கள், எதிர்பார்ப்புகள் என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மத்திய கலால் மற்றும் ஜி.எஸ்.டி. முதன்மை தலைமை கமிஷனர் மண்டலிகா ஸ்ரீனிவாஸ் பேசியதாவது:-
அரசின் முகவர்கள்
வரி செலுத்தும் நுகர்வோர் அனைவருமே அரசின் முகவர்கள்தான். அரசின் சேவைகள் அனைவருக்கும் சரிசமமாகவே கிடைக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் பல்வேறு புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். கடந்த 5 ஆண்டுகளில் சரக்கு மற்றும் சேவைவரி (ஜி.எஸ்.டி.) சிறப்பான சேவையை செய்திருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டான 2017-18-ல் ரூ.80 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய், நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த நிதியாண்டில் ரூ.48 ஆயிரம் கோடியாக இருந்த ஜி.எஸ்.டி. வரிவருவாய், நடப்பு நிதியாண்டில் 62 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிக அளவில் ஜி.எஸ்.டி. வரி வசூலாவதற்கு காரணம் இங்கு உற்பத்தி, ஜவுளி, ஆட்டோமொபைல் தொழில்கள் அதிகளவில் இருப்பதுதான். அனைவரும் முறையாக வரி செலுத்தினால் இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். வங்கி, போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி.யை செலுத்துவதில்லை
அனைத்து தரப்பினரிடம் இருந்தும் வரியை முறையாக வசூலிக்கவும், வரி இழப்பைத் தவிர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வரி செலுத்துவோரில் 95 சதவீதம் பேர் சிறு, குறு, நடுத்தர தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள்தான். அதிகளவில் ஆண்டு வருவாய் ஈட்டக்கூடிய பெருந்தொழில் நிறுவனங்கள் சரிவர ஜி.எஸ்.டி.யை செலுத்துவதில்லை. வரி செலுத்தாதவர்களுக்கு 6 மாத கால அவகாசம் தரப்பட்டு, 3 முறை நோட்டீஸ் அனுப்பப்படும். 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாமல் இருந்தால் 6 மாதங்களுக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.