நாட்டின் பொருளாதார பிரச்சினையை கையாளுவதில் மத்திய அரசுக்கு பெரும் தோல்வி - கே.எஸ்.அழகிரி
நாட்டின் பொருளாதார பிரச்சினையை கையாளுவதில் மத்திய அரசு மிகபெரிய தோல்விகளை சந்தித்து வருகிறது என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது,
காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல்காந்தி வருகிற ஆகஸ்ட் மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரையை தொடங்குகிறார். அதற்காக இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. மத்திய அரசு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை விதித்துள்ளது ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும்.
நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை கையாளுவதில் மத்திய அரசு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதார பிரச்சனைகளை எளிதாக கையாண்டார். ஆனால் தற்போது பொருளாதராம் பற்றி மோடி அரசுக்கு தெரியவில்லை. அதனால் மத்திய நிதி அமைச்சரை மாற்றாமல், பிரதமர் மோடியை மாற்ற வேண்டும்.
ஆங்கில பத்திரிக்கை கருத்துக்கணிப்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த முதல்-அமைச்சர் பட்டியலில் 3-வது இடத்தை கொடுத்துள்ளது. ஆனால் உண்மையிலேயே அவர் இந்தியாவிலேயே சிறந்த முதல்-அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக சிறப்பாக உள்ளது. ஈரோட்டில் நடந்த நெசவாளர் பிரச்சினை, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரத்திலும் துரித நடவடிக்கை எடுத்தார்.
மு.க.ஸ்டாலின் பொருத்தவரை அவர் தவறுகள் நடந்தால் உடனடியாக அதன் மீது நடவடிக்கை மேற்கொள்கிறார். தவறுகள் நடைபெறாமல் இருப்பதிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுகிறார். தேர்தல் அறிக்கையில் கூறியது போல தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 விலை குறைத்துள்ளார். 2024-ஆம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமர் பொறுப்புக்கு வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.