வரத்து அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்ததுஈரோட்டில் ரோட்டோரம் போட்டு 6 கிலோ ரூ.100-க்கு விற்பனை


வரத்து அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்ததுஈரோட்டில் ரோட்டோரம் போட்டு 6 கிலோ ரூ.100-க்கு விற்பனை
x

வரத்து அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்தது ஈரோட்டில் ரோட்டோரம் போட்டு 6 கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.

ஈரோடு

வரத்து அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் ஈரோட்டில் ரோட்டோரம் போட்டு 6 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமையலில் வெங்காயம்

சமையல் என்றாலே அதில் பிரதானமாக இடம்பெறுவது வெங்காயம் தான். சட்னி, சாம்பார், கூட்டு, பொறியல், அவியல் என எந்த உணவாக இருந்தாலும், உணவின் சுவையை கூட்டுவதே வெங்காயத்தின் சிறப்பு. என்னதான் மணக்க மணக்க பிரியாணி இருந்தாலும் தொட்டுக்க வைக்கப்படும் தயிர் வெங்காயம் தான் உணவையே சிறக்க செய்யும். இப்படி சிறப்புமிக்க வெங்காயம் அவ்வப்போது விலை உயர்ந்து மலைக்க வைக்கும். பின்னர் திடீரென விலை சரிந்து வியக்க வைக்கும். அந்தவகையில் தற்போது பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்து வியக்க வைத்திருக்கிறது.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடந்த மாதம் ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனையான பெரிய வெங்காயம், தற்போது ரூ.15-க்கு (மொத்த விலையில்) விற்பனையாகி வருகிறது. சில்லரை வியாபாரத்தை பொறுத்தவரையில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை ஆகிறது. மேலும் ஈரோட்டில் பல்வேறு இடங்களில் ரோட்டோரம் போட்டு 6 கிலோ ரூ.100-க்கும், 5 கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யும் நிலைமை இருக்கிறது. முன்பெல்லாம் ஓட்டலில் பிரைட் ரைஸ் போன்ற உணவுகளிலும், ஆம்லெட்களிலும் வெங்காயத்துடன் முட்டைகோசை கலந்து கொடுப்பார்கள். கேட்டால், 'என்ன பண்றது விலை கட்டுப்படியாகவில்லை' என்பார்கள். இப்போதெல்லாம் புரோட்டாவுக்கு கூட தயிர் வெங்காயம் கொடுக்கிறார்கள்.

மகிழ்ச்சியும், அதிர்ச்சியும்...

இதுகுறித்து ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடைவைத்து நடத்தி வரும் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

ஈரோடு மார்க்கெட்டுக்கு மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா பகுதிகளில் இருந்து வெங்காயம் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. தற்போது அந்த பகுதிகளில் நல்ல விளைச்சல் காரணமாக வரத்து அதிகரித்து இருக்கிறது. ஆனால் அங்கு பெய்து வரும் தொடர் மழையால், 60 முதல் 70 சதவீதம் வரை சுமாரான சரக்கு தான் (லேசாக அடிபட்ட நிலையில்) வருகிறது. தரமான வெங்காயம் வரத்து குறைவாகவே இருக்கிறது.

இதனால் வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த ரக வெங்காயங்களே அதிகளவில் மார்க்கெட்டிலும், வெளிச்சந்தைகளிலும் வெகுவாக விற்பனையாகிறது. இவை ஓய்ந்து, தரமான சரக்கு மட்டுமே வரும் நிலையில் வெங்காயத்தின் விலை அடுத்த வாரமே உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே வெங்காயம் விலை குறைவு நீண்ட நாட்கள் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது வெங்காயத்தின் விலை சரிவு காரணமாக, ஓட்டல்களை போலவே வீடுகளில் வெங்காயத்தின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இன்னும் சில நாட்கள் இந்த நிலை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வெங்காயத்தின் விலை சரிந்ததால் மகிழ்ச்சியில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு, இன்னும் சில நாட்களில் அதிர்ச்சி காத்திருக்கிறது என்பதையே வியாபாரிகளின் கருத்து மறைமுகமாக தெரிவிக்கிறது.


Next Story