'பிக்பாஸ்' பிரபலம் விக்ரமன் மீது பெண் வக்கீல் பரபரப்பு புகார்


பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது பெண் வக்கீல் பரபரப்பு புகார்
x

‘பிக்பாஸ்' பிரபலம் விக்ரமன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் வக்கீல் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார்.

சென்னை,

சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் கிருபா முனுசாமி. இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 'பிக்பாஸ்' பிரபலம் விக்ரமன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தி தொடர்பாளரும், 'பிக்பாஸ்' பிரபலமுமான விக்ரமனும், நானும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தோம். அவர் என்னை காதலிப்பதாக சொன்னார். என்னை சட்டரீதியாக திருமணம் செய்துக் கொள்ளும்படி அவரிடம் கூறினேன். ஆனால் அவர் அதை செய்யவில்லை.

என்னை காதலிப்பதாக சொல்லி ரூ.13.7 லட்சம் பணம் வாங்கினார். அதில் ரூ.12 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டார். மீதி ரூ.1.7 லட்சம் திருப்பி தர வேண்டும். என்னை காதலிப்பதாக சொல்லி மோசடி செய்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையிடம் புகார் கொடுத்தேன். ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விக்ரமன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விக்ரமன் மறுப்பு

பெண் வக்கீல் கிருபா முனுசாமி கொடுத்த புகாருக்கு பதிலளித்து விக்ரமன் கூறியதாவது:-

கிருபாவும், நானும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். அதுதான் உண்மை. அவரை நான் காதலிப்பதாக சொல்லவில்லை. நெருக்கமான தொடர்பும் அவருடன் வைக்கவில்லை. நான் அவரிடம் ரூ.11 லட்சம் பணம் வாங்கியதாக கணக்கு காட்டினார். நான் ரூ.12 லட்சம் திருப்பி கொடுத்துவிட்டேன். எனவே நான் அவருக்கு பணம் எதுவும் கொடுக்க வேண்டியது இல்லை.

அவர் என் மீது கொடுத்துள்ள புகார் தவறானது. இதை நான் சட்டரீதியாக சந்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story