பீகார் வாலிபர் உடல் கருகி பலி
பட்டிவீரன்பட்டி அருகே, பஞ்சு குடோனில் பற்றி எரிந்த தீயில் கருகி பீகார் வாலிபர் பலியானார்.
பஞ்சு குடோனில் பயங்கர தீ
மதுரை முனியாண்டிபுரத்தை சேர்ந்தவர் மிதுன்சக்கரவர்த்தி. இவர், பட்டிவீரன்பட்டி அருகே திண்டுக்கல்-வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'அ' பிரிவில் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்து பஞ்சு மூட்டைகளை வைத்திருந்தார்.
வெளியூர்களில் இருந்து பஞ்சுகளை வாங்கி வந்து, இந்த குடோனில் வைத்து தரம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம்போல் பஞ்சு குடோனில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென குடோனில் தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் தீ மள, மளவென பரவி குடோன் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதனையடுத்து அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பீகார் வாலிபர் பலி
இதுகுறித்து வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப், போக்குவரத்து அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் குடோனில் இருந்த பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து சாம்பலானது. மேலும் குடோனில் பற்றி எரிந்த தீயில், அங்கு பணிபுரிந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த மகேஷ்மாஞ்சி (வயது 35) சிக்கி கொண்டார். உடல் கருகிய நிலையில் அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக குடோனில் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.