வடமாநில தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பிய பீகார் வாலிபரிடம் 3 நாள் விசாரணை நடத்த அனுமதி


வடமாநில தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பிய பீகார் வாலிபரிடம் 3 நாள் விசாரணை நடத்த அனுமதி
x

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய பீகார் வாலிபரிடம் போலீசார் 3 நாட்கள் விசாரணை நடத்த அனுமதித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய பீகார் வாலிபரிடம் போலீசார் 3 நாட்கள் விசாரணை நடத்த அனுமதித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.

சமூக வலைதளங்களில் வைரல்

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். இங்கு அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல சித்தரிக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் சமீபத்தில் வைரல் ஆனது. இந்த தகவல் உண்மையானது இல்லை என்றும் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி போலீசார் விசாரணை நடத்தியதில், பீகாரை சேர்ந்த மணிஷ் காஷ்யப் என்பவர்தான் பொய்யான வீடியோவை வெளியிட்டு வடமாநிலத்தினரிடம் பீதியை கிளப்பியுள்ளார் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் சமீபத்தில் பீகார் மாநிலத்துக்கு விரைந்தனர்.

பீகார் வாலிபர் கைது

நேற்றுமுன்தினம் அவரை பீகாரில் வைத்து தமிழக போலீசார் கைது செய்து நேற்று தமிழகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் நேற்று மாலையில் மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மணிஷ் காஷ்யப்பை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் போலீஸ் காவலில் வைக்க அனுமதிக்கும்படி மாஜிஸ்திரேட்டு டீலா பானுவிடம் போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது கைதானவர் தரப்பில் வக்கீல் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜராகி, மனுதாரர் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு சம்பந்தமான வழக்கில் ஏற்கனவே கைதாகி உள்ளார். அவரை மீண்டும் கைது செய்து இருப்பது சட்டவிரோதம்.

மேலும் அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கின் சட்டப்பிரிவுகள் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில்தான் உள்ளது. எனவே அவரை கைது செய்வது சட்ட விரோதம் என்று வாதாடினார்.

3 நாட்கள் போலீஸ் காவல்

இதேபோல போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் சொக்கலிங்கம், மனுதாரர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவினால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் நிலை இருந்தது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதாடினார்.

விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதானவரிடம் போலீசார் விசாரணை நடத்துவதற்காக 3 நாட்கள் போலீஸ் காவல் அனுமதிக்கப்படுகிறது. எனவே வருகிற 3-ந் தேதி காலை 10:30 மணி அளவில் மீண்டும் அவரை போலீசார் இந்த கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.


Next Story