'பிகினி கொலைகாரன்' சார்லஸ் சோப்ராஜ்


பிகினி கொலைகாரன் சார்லஸ் சோப்ராஜ்
x

பிரபல தொடர் கொலைகாரன் சார்லஸ் சோப்ராஜ், நேபாள சிறையில் இருந்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டால் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டான்.

இந்த விடுதலை, இப்போதும் சர்வதேச அளவில் சத்தமில்லாமல் சில சலன அலைகளை ஏற்படுத்தியிருக்கும்.

காரணம், சார்லஸ் சோப்ராஜின் குற்ற சரித்திரம் அப்படி. ஒரு காலத்தில் சர்வதேச போலீசை (இன்டர்போல்) இமைக்கவிடாமல் இம்சித்தவன் இவன்.

பிரான்ஸ், இந்தியா முதல் பல நாடுகளில் தனது குற்ற தடங்களை பதித்துச் சென்றவன்.

இந்த கிரிமினல் தாத்தாவின் (தற்போது வயது 78 ஆகிவிட்டது) கடந்த கால கதை, எவரையும் தலை கிறுகிறுக்க வைக்கும்.

சார்லஸ் சோப்ராஜின் குற்ற வாழ்வைப் போல அவனது நிஜப்பெயரும் நீளமானது. 'சார்லஸ் குருமுக் சோப்ராஜ் ஹாட்சந்த் பவ்னானி'. இது இவனது இயற்பெயர் என்றால், 'பிகினி (நீச்சலுடை) கொலைகாரன்', 'விஷப்பாம்பு' என்பதெல்லாம் இவனுக்கு கிடைத்த 'பகீர்' பட்டங்கள்.

பிரான்ஸ் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த வியட்நாமின் சைகோன்தான் (தற்போதைய ஹோ சி மின் நகரம்) இவன் பிறந்த ஊர். ஆண்டு 1944.

சட்டப்படி சோப்ராஜ் ஒரு பிரெஞ்சு குடிமகன். ஆனால் இவன் பெயரில் இந்திய வாடை அடிக்கிறதே என்று நீங்கள் நினைத்தால்... அது சரிதான். இவனது தந்தை பவ்னானி, இந்தியர். தாய் டிரான் லோவாங் புன், வியட்நாமிய பெண். ஆனால் இந்த ஜோடி திருமணம் செய்துகொள்ளவில்லை.

பிற்பாடு, வியட்நாமில் பணியில் இருந்த ஒரு பிரெஞ்சு ராணுவ அதிகாரியை சோப்ராஜின் தாய் மணந்தார்.

சோப்ராஜின் 'ஒரிஜினல்' தந்தை அவனை மகனாக ஏற்கவில்லை, 'புதிய' தந்தையும் அவனை பொறுப்போடு வளர்க்கவில்லை. சோப்ராஜின் வினோத, விபரீத வாழ்க்கைக்கான வித்து விழுந்தது இப்படித்தான்.

தாயின் நாட்டுக்கும், இரண்டாவது தந்தையின் நாட்டுக்கும் இடையே அல்லாடிக்கொண்டிருந்த சோப்ராஜ், பிரான்சில் தனது குற்றத் தொழிலை தொடங்கினான். அந்த டீனேஜ் பருவத்தில் சிறுசிறு குற்றங்கள் புரிந்தான். அப்படி திருட்டு ஒன்றில் ஈடுபட்டதற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டான். 1963-ல் சோப்ராஜ் முதன்முதலில் சிறையில் வலது காலெடுத்து வைத்தபோது அவன் 19 வயது பையன்.

தனது வசீகரப் பேச்சால் எவரையும் எளிதில் வளைத்துவிடுவது சோப்ராஜின் 'சீக்ரெட்'. அப்படித்தான் அந்த வயதிலேயே சிறை அதிகாரிகளை கவர்ந்து சில சிறப்புச் சலுகைகளை பெற்றான்.

சிறைக்கு ஒரு தன்னார்வத் தொண்டராக வந்து சென்ற வசதியான வாலிபர் பெலிக்ஸ் டி எஸ்கோன் என்பவருடன் சோப்ராஜ் நட்பை வளர்த்தான். சிறையில் இருந்து வௌியே வந்தபிறகு அவருடன் ஒட்டிக்கொண்டான். நண்பன் உதவியால் ஒருபுறம் பணக்கார வாழ்க்கை, மறுபுறம் குற்றத்தொழில் என 'இருமுகன்' ஆனான்.




இந்நிலையில் சான்டல் காம்பாக்னோன் என்ற பாரீஸ் இளம்பெண்ணை காதலித்து மணந்தான். போலீஸ் துரத்தலில் இருந்து தப்பிக்க 1970-ல் பிரான்சில் இருந்து கர்ப்பிணி மனைவியுடன் வெளியேறினான். போலி ஆவணங்கள், சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிப் பறிப்பது என்று குற்றமும் சூதும் புடைசூழ இந்தியா வந்து சேர்ந்தான். இங்கு அந்நாளைய பம்பாயில் சோப்ராஜின் மனைவி, பெண்குழந்தையை (உஷா) பெற்றெடுத்தார்.

மனைவி துணையிருக்க, கார் திருட்டு, கடத்தல் என்று இந்தியாவிலும் தனது தொழிலை சோப்ராஜ் தொடர்ந்தான். இப்படி முறையற்ற வழிகளில் பணம் குவிய, சூதாட்டத்தில் நாட்டம் காட்டினான்.

1973-ம் ஆண்டில் டெல்லி 5 நட்சத்திர ஓட்டலான அசோகாவில் உள்ள ஒரு நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அங்கு நோய் வாய்ப்பட்டது போல நடித்து தப்பி மீண்டும் பிடிபட்டான்.

ஜாமீனில் வெளிவந்து ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு மனைவி, குழந்தையுடன் தப்பியோடினான். அங்கு சுற்றுலாவாசிகளை ஏமாற்றி பிடிபட்டு, மறுபடி சுகவீனப்பட்டது போல நடித்தான். அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரியில், காவலாளியை ஏமாற்றி தலைமறைவானான்.

பிற்பாடு மலேசியா, ஈரான், துருக்கி, கிரீஸ் என்ற பல நாடுகளில் சோப்ராஜின் ஓட்டம், குற்றம் தொடர்ந்தது. இதற்கிடையில் அவன் மனைவி மனம் வருந்தி, திருந்தி பிரான்ஸ் திரும்பிவிட்டார்.

மறுபுறம் சோப்ராஜ், தன்னுடன் 'கிரைம் பார்ட்னராக' இணைந்த உடன்பிறவா சகோதரன் ஆண்ட்ரேயுடன் வேட்டையை தொடர்ந்தான். கிரீஸ் தலைநகர் ஏதென்சில் அவர்கள் பிடிபட்டனர். துருக்கி போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட ஆண்ட்ரே சிறையில் தள்ளப்பட, சோப்ராஜ் வழக்கம்போல் 'எஸ்கேப்'. அவன், திருடப்பட்ட 10-க்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி உலகை உலா வந்தான்.

மீண்டும் இந்தியா திரும்பிய சார்லஸ் சோப்ராஜ், அஜய் சவுத்திரி என்ற உள்ளூர் குற்ற வாலிபனுடன் இணைந்தான்.

அவர்கள் இருவரும் இணைந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை, 'ஹிப்பி' நாடோடிகளை குறிவைத்து கொள்ளையடித்தனர்.

இந்த இருவர் அணி, முதல் கொலை செய்தது 1975-ல். குற்றம் என்றாலும் சோப்ராஜ் வன்முறைக்கு மாறியது அப்போதுதான். தொடர்ந்து, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், தாய்லாந்து, துருக்கி என பல நாட்டுப் பெண்களும் சோப்ராஜின் வலையில் விழுந்தனர். பரிதாபமாக உயிரைப் பறிகொடுத்தனர்.

இனிக்க இனிக்கப் பேசி, பணம், உடைமைகள், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை கவர்ந்துகொண்டு விஷ ஊசி செலுத்தி வலிக்க வலிக்க கொல்வது சோப்ராஜின் 'ஸ்டைல்'.

நிஜத்தில் வில்லன் என்றாலும் ஹீரோ போன்ற தோற்றம், பலமொழிப் புலமை, நுனி நாக்கில் நடனமிடும் ஆங்கிலம், அசத்தும் உடல்மொழி ஆகியவையே சோப்ராஜின் ஆயுதங்கள். இவற்றைக் கொண்டு இவன் வீழ்த்தியவர்களின் எண்ணிக்கை 30-ஐ தொடும் என்று கூறப்படுகிறது. ஆனால் உறுதிப்படுத்தப்பட்டது 13-தான். கொலையானவர்களில் பெரும்பாலானோர் இளம்பெண்கள். அவர்களில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் 14 பேர். சோப்ராஜுடன் இணைந்து திரிந்த அவர்கள், அடுத்த சில நாட்களில் கடற்கரையிலும், நீச்சல்குளத்திலும் நீச்சலுடையில் மர்மமாய் இறந்துகிடந்தார்கள். சோப்ராஜின் தளபதி போல செயல்பட்ட அஜய் சவுத்திரியும் ஒரு கட்டத்தில் 'காணாமலே' போய்விட்டான்.

ஆனால் சோப்ராஜ் ஒரு கொலையையும் ஒத்துக்கொள்ளவில்லை. தன்னுடன் இருந்தவர்கள், விபத்தாலும், அதீத போதையாலும் இறந்தார்கள் என்றே வாதிட்டான். அவர்களில் சிலர் சோப்ராஜுடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்பதும் உண்மை.

1997-ம் ஆண்டு இந்தியாவில் 21 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு பிரான்ஸ் திரும்பிய சோப்ராஜ், பாரீஸ் புறநகர்ப்பகுதியில் ஒரு படாடோப மாளிகையில் சொகுசாய் வாழத் தொடங்கினான். பெருந்தொகை பெற்றுக்கொண்டு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தான். படங்களுக்கு 'போஸ்' கொடுத்தான். தனது கதையை ஆலிவுட் படமாக்கும் உரிமையை ரூ.124 கோடிக்கு விற்றான். ஆனால் விதி யாரை விட்டது?

1975-ம் ஆண்டு நேபாளத்தில் ஒரு அமெரிக்கப் பெண், ஒரு கனடா பெண் என இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக சோப்ராஜ் தேடப்பட்டு வந்தான். இந்நிலையில் 2003-ம் ஆண்டு வெகு தெனாவட்டாக அவன் நேபாளம் திரும்பினான். அங்கு காத்மாண்டுவில் ஒரு சூதாட்ட விடுதியில் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது 'இமாலயன் டைம்ஸ்' என்ற ஆங்கில நாளிதழ் நிருபர் அவனைக் கண்டு, இரண்டு வாரமாகத் துரத்தி, படங்களுடன் செய்தி வெளியிட்டார். அதைப் பார்த்த போலீஸ் சுதாரித்தது. சோப்ராஜை மடக்கி, பழைய கேசை தூசிதட்டி எடுத்தது.

2004-ம் ஆண்டு சோப்ராஜுக்கு காத்மாண்டு மாவட்ட கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. அந்த வழக்கில்தான், மேல்முறையீட்டின் அடிப்படையில், முதுமை, உடல்நலத்தை கருத்தில்கொண்டு, 19 ஆண்டுகளுக்குப் பின் சோப்ராஜை விடுதலை செய்திருக்கிறது நேபாள சுப்ரீம் கோர்ட்டு. தனது அந்திமக் காலத்தில் சொந்த நாடு திரும்பியிருக்கும் அல்லது கடத்தப்பட்டிருக்கும் சர்வதேச குற்றவாளி சார்லஸ் சோப்ராஜ், இனி என்ன சிந்திப்பான்?

மரண தண்டனையில் இருந்து தப்பிவிட்டாலும், சோப்ராஜின் வாழ்க்கையில் 40 ஆண்டுகள் சிறைக்கம்பிகளுக்கு பின்னாலேயே கரைந்துவிட்டன.

அபார புத்திசாலித்தனத்தை அநியாய வழிகளில் பயன்படுத்தினால் ஆயுளுக்கும் அவஸ்தைப்பட நேரிடும் என்பதே சோப்ராஜின் வாழ்க்கை கற்பிக்கும் பாடம்.


44 வயது இளைய பெண்ணை மணந்தான்


சார்லஸ் சோப்ராஜ் நேபாள சிறையில் இருந்தபோது அவன் சார்பில் வாதிட்ட வக்கீல் சகுந்தலா தாபா. இவரின் மகளும், மொழிபெயர்ப்பாளருமான நிகிதா பிஸ்வாஸ், சார்லஸ் சோப்ராஜை மணக்க விரும்பினார். அதற்கு தாயும் தலையாட்டினார். 2010-ம் ஆண்டு சிறையில் இவர்களின் திருமணம் நடந்தது. அப்போது நிகிதாவுக்கு வயது 20. சோப்ராஜுக்கு வயது 60-க்கு மேல். இருவருக்கும் வயது இடைவெளி 44. 'சார்லசின் கண்கள் என்னை சாய்த்துவிட்டன' என்றார் நிகிதா. இந்த 'கண்கண்ட கணவருக்காக' இவரும், தாயும் நேபாள நீதித்துறையையே எதிர்த்துப் பேசி, தண்டனைக்கு உள்ளாயினர். அது மட்டுமல்ல, 2017-ம் ஆண்டு சோப்ராஜுக்கு இதய அறுவைசிகிச்சை நடந்தபோது, நிகிதா ரத்தம் கொடுத்து கணவரை காப்பாற்றினார்.


திகார் 'பர்த்டே பார்ட்டி'




1976-ம் ஆண்டு, ஆசியாவிலேயே பெரிய சிறையாக கருதப்படும் டெல்லி திகாரில் தள்ளப்பட்ட சோப்ராஜ், தன்னுடன் வைரங்களை மறைத்து எடுத்துச் சென்றிருந்தான். அதைக் கொண்டு சிறை அதிகாரிகள், காவலர்களை நன்கு 'கவனித்தான்'. அவர்களும் பதிலுக்கு இவனை நன்கு கவனித்துக்கொண்டார்கள். சிறையில் சொகுசாய் வாழ்ந்தாலும், 10 ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்பட்டதும், தாய்லாந்துக்கு நாடு கடத்தப்பட்டு, அங்கு செய்த கொலைகளுக்காக தூக்கில் தொங்கவிடப்பட இருந்தான். இந்நிலையில் சுறுசுறுவென்று சிந்தித்தவன், 1986-ம் ஆண்டு மார்ச்சில் தனது பிறந்த நாளன்று சிறைக் காவலர்களுக்கும், சக சிறைவாசிகளுக்கும் 'கிராண்ட் பார்ட்டி' கொடுத்தான். அவர்கள் அதில் நெகிழ்ந்தனர், 'பார்ட்டி'க்கு பின் 'மயங்கினர்'. ஆம், 'கேக்'கில் தூக்க மாத்திரைகளை கலந்துகொடுத்திருந்தான் சோப்ராஜ். சிறையில் இருந்து நழுவி, கோவாவில் குதூகலித்துக் கொண்டிருந்த சோப்ராஜ், 22 நாட்களில் கைது செய்யப்பட்டான். அவனது சிறை தண்டனை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. சோப்ராஜ் எதிர்பார்த்ததும் அதைத்தானே? தாய்லாந்துக்கு அனுப்பப்படாமல் அவன் தலை தப்பியது.


படமாக... எழுத்தாக...



ஒரு திரைப்படத்துக்கு ஏற்ற சுவாரசிய திருப்பங்கள் கொண்ட சோப்ராஜின் வாழ்க்கை, 2015-ல் 'மே ஆர் சார்லஸ்' ('நானும் சார்லசும்') என இந்தி திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. சோப்ராஜாக ரந்தீப் ஹூடா நடித்த இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கினார், பிரவால் ராமன். அதற்கு முன்பு, 'நாகத்தின் நிழல்' என்ற பெயரில் டி.வி. படமானது, சோப்ராஜின் கதை. 'பாம்பு', 'சார்லசின் வாழ்வும் குற்றங்களும்' என்ற நூல்கள் வெளியாகி விற்பனையில் விறுவிறுப்பு காட்டின. 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' இதழின் 'இன்டர்போலின் மாபெரும் வழக்குகள்' என்ற தொகுப்பில் 'நீச்சலுடை கொலைகள்' என்ற தலைப்பில் சோப்ராஜின் கதை இடம்பெற்றது. இவனைப் பற்றிய 8 பாக தொடர் பி.பி.சி.யில் வெளியானது. அது கடந்த ஆண்டு, 'நெட்பிளிக்ஸ்' ஓ.டி.டி. தளத்திலும் வெளியானது.


Next Story