கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்
சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதிக்கொண்ட வழக்கில் ஊராட்சி தலைவியின் கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு:
சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி அருகே உள்ள ராவுத்தநல்லூரில் நேற்று முன்தினம் கோவில் திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து கூழ்வார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த மாயவன்(வயது 50) என்பவர், அனைவரும் வரிசையாக நின்று கூழ் வாங்கிச் செல்லுமாறு கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவரான கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் அரிவாள், உருட்டு கட்டையுடன் மாயவனை தாக்கினார். பதிலுக்கு மாயவன் தரப்பினரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாயவன் கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவியின் கணவரான கதிரவன், சக்திவேல், எம்.ஜி., சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான தனஞ்செழியன், பிரகலாதன், வீரமணி, மணி, சவுந்தர், தனுசு ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.