இரு தரப்பினர் மோதல்; 3 பேர் காயம்-6 பேர் கைது
திசையன்விளை அருகே இருதரப்பினர் மோதிக்கொண்டதில் 3 பேர் காயம் அடைந்தனர். 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே இருதரப்பினர் மோதிக்கொண்டதில் 3 பேர் காயம் அடைந்தனர். 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்விரோதம்
நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த செல்வமருதூர் யாதவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவருடைய மகன் அந்தோணிராஜ் (வயது 22).
அதே பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவருடைய மகன் நவின் (23). இவர்களுக்குள், தெருவில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தோணிராஜ்க்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த அர்ச்சுனன், சூரியா, முத்துகுமரன், சண்முகவேல், ஆகாஷ், ஜெகதீஷ் ஆகியோர் வந்துள்ளனர்.
இதேபோல் நவினுக்கு ஆதரவாக பிரவின், முத்து கண்ணன், ரூபன், சந்துரு, சிவராமன், வெள்ளையம்மாள், நந்தினி ஆகியோர் வந்துள்ளனர் அப்போது இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மோதல்
இதில் ஆத்திரத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கியுள்ளனர். இந்த மோதலில் நவின், அந்தோணிராஜ், ஜெகதீஷ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியே திசையன்விளை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து நவின், அந்தோணிராஜ், ஜெகதீஷ், ஐகோர்ட் ராஜா, அர்ஜூன், முத்துகுமரன் ஆகியோரை கைது செய்தார்.மற்றவர்களை தேடி வருகிறார்.