இரு தரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு


இரு தரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு
x

இரு தரப்பினர் மோதல் தொடர்பாக பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்

தா.பழூர்:

மோதல்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தேவமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(வயது 50). இவரது மனைவி கொளஞ்சியம்மாள். இவர்கள் தேவமங்கலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் அவர்களது ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பழமலை(43) என்பவர், அவரது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து ஆடுகள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் கல்யாண சுந்தரம் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் பழமலை தரப்பை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

வழக்கு

இதில் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது மனைவி கொளஞ்சியம்மாள் ஆகியோர் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தா.பழூர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் கொளஞ்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பழமலை(43), அவரது மனைவி லதா(40), மகள் காந்தமணி ஆகியோர் மீதும், பழமலை கொடுத்த புகாரின் பேரில் கல்யாணசுந்தரம் (50), கொளஞ்சியம்மாள், அவர்களது மகன் சூர்யா ஆகியோர் மீதும் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story