இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு
இருதரப்பினர் மோதல் தொடர்பாக பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே குமணந்துறை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மனைவி அம்பிகா(வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி காந்திமதி(41). உறவினர்களான இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அம்பிகாவை பார்த்து காந்திமதி திட்டியதாக கூறப்படுகிறது. இது பற்றி அம்பிகா கேட்டதையடுத்து, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு அம்பிகாவின் உறவினர்களான அருள்தாஸ், பன்னீர்செல்வம், மல்லிகா ஆகிய 3 ேபர் வந்துள்ளனர். இதேபோல் காந்திமதியின் உறவினர்களான முருகேசன், அறிவழகி, அருள்காந்தி ஆகிய 3 ேபரும் அங்கு வந்துள்ளனர். இதையடுத்து இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த அம்பிகா மற்றும் காந்திமதி ஆகியோர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இரு தரப்பினரும் விக்கிரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் இருதரப்பை சேர்ந்த காந்திமதி, முருகேசன், அறிவழகி, அருள்காந்தி மற்றும் அம்பிகா, அருள்தாஸ், பன்னீர்செல்வம், மல்லிகா ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.