நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதல்; 2 பேர் படுகாயம்
சாயல்குடி அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாயல்குடி
சாயல்குடி அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருதரப்பு மீனவர்கள் மோதல்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ரோச் மாநகர், கன்னிராஜபுரம், மூக்கையூர், வாலிநோக்கம், நரிப்பையூர், மாரியூர் கீழமுந்தல், மேலமுந்தல் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ரோச்மாநகர் கிராம மீனவர்கள் ஒரு நாட்டு படகில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் தூத்துக்குடி வேம்பார் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க வந்தனர். நடுக்கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
2 பேர் படுகாயம்
அதில் ரோச் மாநகர் கிராமத்தைச் சேர்ந்த பெனிட்டன்(வயது 25), ஸ்டீபன் ராஜ் (18) ஆகிய 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த தாக்குதலில் நாட்டு படகு சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரோச் மாநகர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடற்கரையில் திரண்டு தாக்கிச்சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வாலிநோக்கம் கடலோர காவல் படை போலீசார் தப்பிச்சென்ற விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சாயல்குடி பகுதியில் உள்ள கடலோர பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு இடையே அடிக்கடி நடுக்கடலில் ஏற்படும் பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.