பில் தொகை முறையாக வழங்கப்படாததால் திட்டப்பணிகள் தாமதம்


பில் தொகை முறையாக வழங்கப்படாததால் திட்டப்பணிகள் தாமதம்
x

பில் தொகை முறையாக வழங்கப்படாததால் திட்டப்பணிகள் தாமதம்

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

பில் தொகை முறையாக வழங்கப்படாததால் பணிகள் தாமதமாவதாக கவுன்சிலர்கள் திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டத்தில் குற்றச்சாட்டு தெரிவித்ததால் கூச்சல்-குழப்பம் நிலவியது.

நகராட்சி கூட்டம்

திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டம் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நகராட்சி தலைவர் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் ஜெகதீஸ்வரி, நகராட்சி பொறியாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமிஷனர் முகம்மது சம்சுதீன் வரவேற்றார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

லதாசேகர் (அ.தி.மு.க.)- திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு பொது நிதியாக அறிவிக்கப்பட்ட தொகை இன்னும் வரவில்லை என்று காரணம் காட்டி பணிகள் தாமதமாக மேற்கொள்ளப்படுகிறது. எனவே நிதியை முழுமையாக விடுவித்து வளர்ச்சி பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பகுதிகளில் தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பில் தொகை

சுப்பிரமணியம் (மா.கம்யூனிஸ்டு): நகராட்சியில் 15 ஆண்டுகளாக பணியாற்றும் துப்புரவு, குடிநீர் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 10-வது வார்டில் நமக்கு நாமே திட்ட பணிகளை விரைவாக தொடங்க வேண்டும். நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 1.28 ஏக்கர் இடத்தை வாங்கி, படுக்கை வசதியுடன் கூடிய சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

பாரதி (தி.மு.க.) - நகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு பில் தொகை முறையாக வழங்கப்படாததால் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் நிலை உள்ளது.

கார்த்தி (அ.தி.மு.க.) - 4-வது வார்டு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு உடனடியாக வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். மேலும் வீட்டு வரி உடனடியாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜன் (தி.மு.க.) - நகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளுக்கான பில் தொகையை உடனுக்குடன் முறையாக வழங்க வேண்டும்.

நகராட்சி தலைவர் குமார் கவுன்சிலர்களின் விவாதத்திற்கு பதில் அளித்து பேசியதாவது:- திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு தேவையான அதிகாரிகள் இதுவரை நியமிக்கப்படாததால் பணிகள் தாமதமாக நடைபெறுகிறது. நகராட்சியில் ஒருசில பணிகள் தவிர பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் முறையாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரூ.28 ஆயிரம் செலுத்தி குடிநீர் இணைப்பு பெறாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கும், புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் வரைமுறைப்படுத்தி செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். முறைகேடான குடிநீர் இணைப்புகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, தொடர்ந்து இணைப்புகள் துண்டிக்கப்படும்.

இவ்வாறு நகராட்சி தலைவர் குமார் தெரிவித்தார்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நகராட்சி பகுதிகளில் அனைத்து பணிகளும் மிகவும் தாமதமாக நடைபெறுகிறது என்று கூறியும், ஏற்கனவே மேற்கொள்ள பணிகளுக்கான பில் தொகையை நகராட்சி நிர்வாகம் முறையாக வழங்காததால் அடுத்தகட்ட பணிகளை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது என்று கூறி தி.மு.க., அ.தி.மு.க., இ.கம்யூ., மா.கம்யூ. உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் எழுந்து நின்று கமிஷனரிடம் முறையிட்டனர். மேலும் பொதுமக்களுக்கு தேவையான பணிகளை சரியான நேரத்தில் செய்து கொடுக்க முடியாததால் வார்டுகளுக்குள் செல்ல முடியவில்லை என்றும், இதனால் அரசுக்கும், கவுன்சிலர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் நிலவியது.

இதன் பின்னர் நகராட்சியின் பொது சுகாதார பணிகளுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பான தீர்மானம் தவிர மொத்தம் 54 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.


Next Story