ரூ.41 லட்சம் உண்டியல் காணிக்கை
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ரூ.41 லட்சம் உண்டியல் காணிக்கை இருந்தது.
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே மடப்புரத்தில் புகழ்பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் மற்ற நாட்களில் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். இதேபோல் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று இரவு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும். இங்கு ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
இந்தநிலையில் பக்தர்களின் காணிக்கை உண்டியல் திறப்பு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் (நகைகள் சரிபார்ப்பு) சிவராம்குமார் தலைமை தாங்கினார். கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி, அறங்காவலர் குழு தலைவர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியல் எண்ணிக்கையில் கோவில் கண்காணிப்பாளர் வசந்தா, ஆய்வாளர் தமிழரசி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், சண்முகவேலு மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். உண்டியலில் ரொக்கமாக ரூ.41 லட்சத்து 48 ஆயிரத்து 905-ம், தங்கம் 356 கிராம், வெள்ளி 408 கிராம் இருந்தது.