பிஞ்சி ஏரி ரூ.44 கோடியில் பொழுது போக்கு இடமாக மாற்றம்


பிஞ்சி ஏரி ரூ.44 கோடியில் பொழுது போக்கு இடமாக மாற்றம்
x

ராணிப்பேட்டை பிஞ்சி ஏரி ரூ.44 கோடியில் இயற்கை எழிலுடன், பொழுதுபோக்கு இடமாக மாற்றப்பட்டு வரும் பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.காந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை பிஞ்சி ஏரி ரூ.44 கோடியில் இயற்கை எழிலுடன், பொழுதுபோக்கு இடமாக மாற்றப்பட்டு வரும் பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.காந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

ஏரி புனரமைப்பு

ராணிப்பேட்டை நகராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிஞ்சி ஏரியினை இயற்கை எழிலுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சமாக மாற்றிட மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புனரமைப்பு பணிகள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் பிஞ்சி ஏரி புனரமைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத் காந்தி ஆகியோர், அமைச்சர் நேரு மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு எடுத்துரைத்தனர்.

அப்போது ஏரி நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத்திற்கு மாற்றிட அனுமதி கேட்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நமக்கு நாமே திட்டத்தில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிஞ்சி ஏரியை பொழுதுபோக்கு இடமாக மாற்றிட ரூ.44 கோடிக்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஒப்படைக்க நடவடிக்கை

இப்பணிக்கு தேவையான அனைத்து உதவிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் எனவும், உடனே நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் இருந்து நகராட்சி நிர்வாகத்திற்கு ஏரியை ஒப்படைத்திட தீர்மானம் நிறைவேற்றி வழங்கிட அமைச்சர் நேரு கேட்டுக்கொண்டார்.

ஆய்வின்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், மற்றும் அரசு அலுவலர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வாலாஜா

அதேபோல் வாலாஜாபேட்டை பஸ் நிலைய விரிவாக்க பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளையும் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.காந்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திட்டங்களை செயல்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.


Next Story