நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை அறிமுகம்
தஞ்சை மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளை தடுக்கும் வகையில் பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை நாளை முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறி உள்ளார்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளை தடுக்கும் வகையில் பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை நாளை முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறி உள்ளார்.
நெல் கொள்முதல் நிலையம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூர் மண்டலத்தில் நடப்பு பருவத்துக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு மூன்றாம் பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனைக்காக இணைய வழியில் பதிவு செய்யும்போது, "பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை புதிதாக நாளை (வியாழக்கிழமை) முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் நெல் வியாபாரிகள் உள் நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் நெல்லை கால தாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியும்.
பயோமெட்ரிக் கருவி
பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலமும், ஆதார் எண்ணில் பதிவு செய்திருக்கும் செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. பெறுவதன் மூலமும் விவசாயிகளின் விவரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த விரல் ரேகை பதிவு மூலம் விவசாயிகளின் சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா? என கொள்முதல் நிலையங்களிலேயே சரி பார்த்துக் கொண்டு நெல்லை விற்பனை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.