அழகப்பா பல்கலைக்கழக தாவரவியல் துறை சார்பில் ரூ.22 லட்சத்தில் பயோ கம்போசிட் எந்திரம்
அழகப்பா பல்கலைக்கழக தாவரவியல் துறை சார்பில் ரூ.22 லட்சத்தில் பயோ கம்போசிட் எந்திரம் அமைக்கப்பட்டது.
காரைக்குடி,
தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தின் நிதி உதவியின் கீழ் பூஜ்ய கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கழிவுகளை மறுசுழற்சி செய்யக்கூடிய பயோ கம்போசிட் மிசின் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தாவரவியல் துறை சார்பாக வாங்கப்பட்டு அழகப்பா முன்னாள் மாணவர் பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி புதிய பயோ கம்போசிட் மிஷினின் இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், பயோ கம்போசிட் மிஷின் மூலம், காகிதங்கள், பிளாஸ்டிக், உலோகங்கள், கண்ணாடி, உணவு கழிவுகள் மற்றும் மக்கும் பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் மீண்டும் பல்வேறு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பல மூலப் பொருட்களாக மாற்றம் செய்து தர முடியும். இவ்வாறு மறுசுழற்சி செய்வதன் மூலம் ஜீரோ வேஸ்ட் திட்ட கல்வியை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் முடியும். பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யப்படும் போது ஏற்படும் கார்பன் தடத்தினைவிட மறுசுழற்சி மூலம் செய்யப்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் பொழுது ஏற்படும் கார்பன் தடம் மிகக் குறைவு. பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பெறப்படும் கழிவுகளை பயோ கம்போசிட் மிஷின் மூலம் மறுசுழற்சி செய்து பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து தோட்டங்களுக்கும் இயற்கை உரமாக அளிக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ராஜமோகன், தாவரவியல் துறை தலைவர் பாண்டிமாதேவி, தாவரவியல் துறை பேராசிரியரும், திட்டத்தின் முதன்மை ஆய்வாளருமான ஆறுமுகம், பல்கலைக்கழக பசுமை வளாக ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.