ரேஷன் கடைகளில் அடிக்கடி பழுதாகும் பயோ மெட்ரிக் எந்திரம்


ரேஷன் கடைகளில் அடிக்கடி பழுதாகும் பயோ மெட்ரிக் எந்திரம்
x

தென்காசி ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் எந்திரம் அடிக்கடி பழுதாவதால் ஊழியர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

தென்காசி

தென்காசி:

தமிழக அரசின் பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்களை வாங்குவதற்காக செல்லும் பொதுமக்களின் ரேஷன் கார்டுகளில் இருக்கும் பெயர்களில் யாராவது ஒருவர் அங்கு செல்ல வேண்டும். அப்போதுதான் பொருட்களை வாங்க முடியும். அவ்வாறு செல்லும்போது அவர்களது கைவிரல் ரேகையை கடையில் உள்ள பயோமெட்ரிக் எந்திரத்தில் பதிவு செய்தால்தான் பொருட்களை கடை ஊழியர்கள் வழங்குவார்கள். அவ்வாறு பதிவு செய்யும்போது அடிக்கடி இந்த எந்திரங்கள் பழுதாகி விடுகின்றன.

இதனால் பொதுமக்களுக்கு கடை ஊழியர்கள் பொருட்களை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. வெகு தூரத்திலிருந்து வரும் பொதுமக்கள் மீண்டும் கடைக்கு வந்து பொருட்களை வாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் வீணாக பொதுமக்கள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். மேலும் இந்த எந்திரம் இணையதளத்தில் செயல்படுவதால் இணைப்பு கிடைக்காமலும் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் உருவாகிறது.

இதுபற்றி கடை ஊழியர்கள் கூறுகையில், "பயோமெட்ரிக் முறையை மாற்றி கருவிழியை பயன்படுத்தி பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இணையதள இணைப்பு சீராக கிடைக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றனர்.


Next Story