திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி


தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்

வடுவூர்:

திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

வடகிழக்கு பருவமழை

திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் ஏரி பறவைகள் சரணாலயமாக உள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான இந்த வடுவூர் ஏரிக்கு நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இருக்கும்.

முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரத்திலும் பறவைகள் சரணாலயம் உள்ளது. மேலும் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை பகுதியில் தொடங்கும் அலையாத்திக்காடு ஆசியாவிலேயே பெரிய மாங்குரோவ் காடாக உள்ளது.

இந்த மூன்று இடங்களிலும் மற்றும் அதனை சுற்றி பறவைகள் வரக்கூடிய அனைத்து நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு வனத்துறை சார்பில் 2 கட்டமாக நடைபெறும்.

பறவைகள் கணக்கெடுப்பு பணி

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் ஏரி, உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், முத்துப்பேட்டை அலையாத்திக்காடு உள்ளிட்ட 20 நீர் நிலைகளில் முதற்கட்டமாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடந்தது.

வடுவூரில் நடந்த நிகழ்ச்சிக்கு திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பறவைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அறிவொழி, துணை கலெக்டர் கீர்த்தனாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

102 இனங்கள் காணப்பட்டது

பறவை ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.முதற்கட்ட கணக்கெடுப்பில் வடுவூர் ஏரி, முத்துப்பேட்டை அலையாத்திக்காடு, உதயமார்த்தாண்டபுரம் உள்பட 20 நீர்நிலைகளில் 102 பறவை இனங்கள் மாவட்டம் முழுவதும் காணப்பட்டது. நத்தை கொத்தி நாரை, சிறிய உள்ளான், வெள்ளை அரிவாள் மூக்கன், நாம கோழி, நெடுங்கால் உள்ளான், நீர் காகம், ஐரோப்பா கரண்டிவாயன், ஆலா, மடையான் ஆகிய இனங்களில் ஒவ்வொன்றிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தங்கி இருப்பது தெரிய வந்தது.

29 ஆயிரம் பறவைகள்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் நீர் நிலைகளில் தங்கி உள்ளது. ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் வந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2-ம் கட்ட கணக்கெடுக்கும் பணி வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.


Next Story