வயல்களில் தேங்கிய மழைநீரில் இரை தேட குவிந்த பறவைகள்
சரணாலயங்களுக்கு வராத நிலையில் சாயல்குடி அருகே வயல்வெளிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் பறவைகள் இரைதேட குவிந்துள்ளன.
சாயல்குடி,
சரணாலயங்களுக்கு வராத நிலையில் சாயல்குடி அருகே வயல்வெளிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் பறவைகள் இரைதேட குவிந்துள்ளன.
பறவைகள் சரணாலயம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. அதன்படி ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய், நயினார்கோவில் அருகே தேர்த்தங்கல், முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி காஞ்சிரங்குளம் மற்றும் சாயல்குடி அருகே மேல செல்வனூர். மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த பறவைகள் சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதும் அக்டோபர், நவம்பர் மாதத்தில் இருந்து சாம்பல் நிற நாரை, தத்தை குத்திநாரை, மஞ்சள் மூக்கு நாரை, கூலைக்கடா, நாமகோழி உள்ளிட்ட பல வகையான பறவைகள் வரும். இவ்வாறு வரும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து மீண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் திரும்பி செல்லும்.
இதனிடையே கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் மழை பெய்யாததால் ராமநாதபுரத்தில் உள்ள சக்கரக்கோட்டை கண்மாய் பறவைகள் சரணாலயங்களுக்கு மட்டும் மிக குறைவான பறவைகள் வந்திருந்தன. மற்ற சரணாலயங்களுக்கு பறவைகள் வரத்து இல்லாமல் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் வெறிச்சோடி காணப்பட்டது.
வயலில் இரை தேடும் பறவைகள்
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் கோடை மழை பெய்தது. தொடர்ந்து பெய்த கோடை மழையால் சாயல்குடி அருகே மேல கிடாரம், கடுகு சந்தை, மேச்செல்வனூர், கீழச்செல்வனூர் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள வயல்வெளி பகுதிகளிலும் ஓரளவு தண்ணீர் தேங்கி நிற்கின்றது.
இந்த வயல்வெளிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் உள்ள புழு, பூச்சி உள்ளிட்டவைகளை இரை தேடுவதற்காக கருப்பு அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், பிரவுன் கலர் அரிவாள் மூக்கன் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் குவிந்துள்ளன. இத்துடன் கொக்குகளும், இரை தேடுவதற்காக குவிந்துள்ளன. சரணாலயத்துக்கு பறவைகள் வராத நிலையில் வயல்வெளிகளில் இரை தேடும் பறவைகளை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.