ஸ்ரீவைகுண்டம் அருகே பிறந்தநாள் கொண்டாட்டம்:தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு தீபாராதனை


ஸ்ரீவைகுண்டம் அருகே பிறந்தநாள் கொண்டாட்டம்:தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு தீபாராதனை
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 18 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

குளித்தால் புண்ணியம்

வைகாசி விசாகம் அன்று தான் தாமிரபரணியை அகத்தியர் தனது கமண்டல நீரில் இருந்து பொதிகைமலையில் விட்டு நதியை ஓடச் செய்தார் என்று தாமிரபரணி மகாத்மியம் கூறுகிறது. தாமிரபரணி நதி பரணி என போற்றபட்டாலும் வைகாசி விசாக நட்சத்திரத்தில் தோன்றியது என்ற கூற்றும் தாமிரபரணி மகாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தான் வைகாசி விசாகம் தாமிரபரணி நதியில் பெருமையாகப் போற்றப்படுகிறது. இந்த நாளில் தான் குபேரன் தாமிரபரணி நதியில் மூழ்கி தான் இழந்த பொருளை மீட்டார். நம்மாழ்வார் பிறந்ததும் இந்த நாளில் தான். முருகப்பெருமான் அவதாரமும் வைகாசி விசாகத்தில் தான் நடைபெறுகிறது.

முத்தாலங்குறிச்சி

இந்தநாளில் தாமிரபணி ஆற்றில் எங்கு குளித்தாலும் 12 வருடத்துக்கு ஒரு முறை கும்பகோணம் மகாமகத்தில் குளித்த புண்ணியம் கிட்டுகிறது. இந்த நாளில் தாமிரபணிக்கு பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நேற்று நதிக்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் பூஜைகள் நடைபெற்றது. இந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில் தாமிரபரணி பிறந்த நாளை முன்னிட்டு, நதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை நடந்தது. இதைமுன்னிட்டு தாமிரபரணி நதிக்கரை அருகே உள்ள முத்தாலங்குறிச்சி வீரபாண்டிஸ்வரர் என்ற முகில் வண்ணநாதர், முக்குறுணி அரிசி பிள்ளையார், லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. அதன்பின் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் தாமிரபரணி பிறந்த நாளை முன்னிட்டு மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்று நடப்பட்டது. அதைதொடர்ந்து முத்தாலங்குறிச்சி நல்லபிள்ளைபெற்ற குணவதியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

ஆற்றுக்கு தீபாராதனை

பின்னர் கோவிலில் இருந்து கும்பம் எடுத்து ஊர்வலமாக வந்து தாமிரபரணி நதிக்கு 21 வகையான அபிஷேகங்கள் செய்து கும்பநீரும் ஊற்றி அபிஷேகம் நடந்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட மழை வேண்டி ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி தலைமை வகித்து பூஜைகளை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். மேலும், தாமிரபரணியை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.


Next Story