குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரியாணி விருந்து
குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரியாணி விருந்து நடந்தது தொடர்பாக டாக்டர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் ேநரில் விசாரணை நடத்தினர்.
பிரியாணி விருந்து
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பிரியாணி சமைக்கப்பட்டு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு விருந்து வைக்கப்பட்டு அனைவரும் உணவு உண்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.மேலும் அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் அனைவருக்கும் விருந்து வைக்கப்பட்டது எதற்காக என்பது தொடர்பான கேள்விகளும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டன. இதுபோல் இந்த விருந்து நடத்தியவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிகாரிகள் விசாரணை
இதுகுறித்து இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் பூமிநாதனிடம் கேட்டபோது மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்பட அனைவரும் அதிகப்படியான வேலை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தனர். எனவே அவர்கள் இயல்பாக இருப்பதற்காக உணவு சமைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் உணவு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.மருத்துவமனையில் விருந்து நடந்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து நேற்று குளித்தலை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டவர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.