குடும்ப தகராறில் பிரியாணி மாஸ்டர் அடித்துக் கொலை


ஆற்காடு அருகே குடும்ப தகராறில் பிரியாணி மாஸ்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மருமகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

ஆற்காடு அருகே குடும்ப தகராறில் பிரியாணி மாஸ்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மருமகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப தகராறு

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் மலையடிவாரம் ஹம்சா நகரைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 45). இவர் வேலூரில் உள்ள ஒரு ஓட்டலில் பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவரின் முதல் மகளின் கணவன் ரகமதுல்லா (30), டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் ஹம்சா வசிக்கும் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக ரகமதுல்லாவின் நடவடிக்கையில் மாற்றம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு இஸ்மாயில் தனது மருமகனை அழைத்து பேசி உள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரகமதுல்லா, இஸ்மாயிலை தாக்கியதாக கூறப்படுகிறது.

அடித்துக் கொலை

இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த இஸ்மாயிலை உறவினர்கள் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மருமகன் ரஹமத்துல்லாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story