பிஷப் கால்டுவெல் நினைவு இல்லம் ரூ.2 கோடியில் புதுப்பிக்கப்படும்-சபாநாயகர் அப்பாவு தகவல்
இடையன்குடியில் பிஷப் கால்டுவெல் நினைவு இல்லம் ரூ.2 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
திசையன்விளை:
இடையன்குடியில் பிஷப் கால்டுவெல் நினைவு இல்லம் ரூ.2 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
பிஷப் கால்டுவெல் பிறந்த நாள் விழா
தமிழுக்கு ஒப்பிலக்கணம் எழுதிய பிஷப் கால்டுவெல் 209-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திசையன்விளை அருகே இடையன்குடியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உருவ சிலைக்கு சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.2 கோடியில்...
தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைக்க பேருதவியாக இருந்தவர் பிஷப் ராபர்ட் கால்டுவெல். இவர் வாழ்ந்த இல்லத்தை கடந்த 2009-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி அரசு நினைவு இல்லமாக மாற்றினார். மேலும் அவருக்கு தபால்தலை வெளியிட்டு பெருமைப்படுத்தினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சிக்கு திராவிடம் என்ற வார்த்தையை முதன் முதலில் உலகிற்கு தந்தவர் கால்டுவெல். இவரது நினைவு இல்லம் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து ரூ.2 கோடியே 6 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெருவுக்கு பெயர் சூட்டப்பட்டு...
தொடர்ந்து இடையன்குடியில் தமிழ் அறிஞர் கால்டுவெல் பெயர் சூட்டப்பட்ட தெருவை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
விழாவில் சேகரகுரு பர்னபாஸ், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.