கூட்டமாக உலா வந்த காட்டெருமைகள்


கூட்டமாக உலா வந்த காட்டெருமைகள்
x
தினத்தந்தி 21 April 2023 12:30 AM IST (Updated: 21 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வந்தன.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் காட்டெருமைகளுக்கு பஞ்சம் இல்லை. இவை அவ்வப்போது நகருக்குள் கூட்டமாக வலம் வந்து சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் மிரள வைப்பது வாடிக்கையாகி விட்டது. அதன்படி கொடைக்கானலில் பரபரப்பாக காட்சி அளிக்கும் மூஞ்சிக்கல், அரசு மேல்நிலைப்பள்ளி, எம்.எம். தெரு உள்ளிட்ட பிரதான சாலைகளில் நேற்று காலை காட்டெருமைகள் முகாமிட்டிருந்தன.

குட்டிகளுடன் அங்கு வந்த 15-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள், சர்வ சாதாரணமாக சாலைகளில் உலா வந்தன. இதனைக்கண்ட சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பொதுமக்களும் பீதி அடைந்தனர். மறியலில் ஈடுபடுவதை போல சாலையை மறித்து, காட்டெருமைகள் அப்படியே நின்று கொண்டன. இதனால் வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் அச்சத்துடன் காத்திருந்தனர். மேலும் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சுமார் 1 மணி நேரம் போராடி காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். தற்போது கொடைக்கானலில் சீசன் தொடங்கி உள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. எனவே மனித-வனவிலங்கு ேமாதல் ஏற்படாத வகையில், காட்டெருமைகள் நகருக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story