பா.ஜ.க. ராட்சசன் மாதிரி உருவெடுத்து வருகிறது


பா.ஜ.க. ராட்சசன் மாதிரி உருவெடுத்து வருகிறது
x

பா.ஜ.க. ராட்சசன் மாதிரி உருவெடுத்து வருகிறது என்று லத்தேரியில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

வேலூர்

பா.ஜ.க. ராட்சசன் மாதிரி உருவெடுத்து வருகிறது என்று லத்தேரியில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

தி.மு.க. பொதுஉறுப்பினர் கூட்டம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த லத்தேரியில் வேலூர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

ரூ.7 லட்சம் கோடி கடன்

நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். ஆனால் ஆட்சியை நடத்துவதற்கு நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். ஜெயலலிதா, எடப்பாடி வீட்டுக்கு போகும்போது ரூ.7 லட்சம் கோடி கடன் இருந்தது. பாதிக்கு மேல் வட்டி மட்டும் கட்டுகிறோம். என்னுடைய இலாகாவில் ரூ.1,000 கோடி கடன் வாங்கி இருக்கிறேன். மாதம் ரூ.14 கோடி வட்டி கட்டுகிறோம். வருமானம் இல்லை.

நம்மை ஒழிக்க வேண்டும் என்று மேல் ஜாதிக்காரர்கள் வியூகம் வகுத்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கட்சிக்காரர்களாகிய நீங்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். கட்சி ஏதும் செய்யவில்லை என்ற எண்ணம் ஒரு போதும் வேண்டாம். இந்த இயக்கத்தால் தான் நம் பிள்ளைகள் படித்து முன்னேறி உள்ளார்கள். நம் இயக்கம் இல்லாவிட்டால் நாம் காட்டு மிராண்டிகளாகத் தான் போய் இருப்போம்.

ராட்சசன் மாதிரி

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 10 பேர் கொண்ட குழு அமைத்து பூத் கமிட்டி உருவாக்க வேண்டும். இந்த குழுவில் உறவினர்களைச் சேர்க்காமல், கட்சிக்காக உழைப்பவர்களை சேர்க்க வேண்டும். நம்மிடம் இருந்து பிரிந்துபோன அ.தி.மு.க.வை நாம் பார்த்து விட்டோம். தற்போது பிசாசு, ராட்சசன் மாதிரி பா.ஜ.க. உருவெடுத்து வருகிறது. பொங்கல் புத்தாண்டுக்குள் எல்லா பணிகளையும் முடிக்க வேண்டும். தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் தான் அதிகாரிகள் பயப்படுவார்கள். மத்திய அரசும் நமக்கு பயப்படும்.

நான் உங்களை விட கீழ்மட்டத்திலிருந்து வந்தவன். இந்த கட்சியில் 60 ஆண்டுகால உழைப்பிற்குப் பின் காங்குப்பத்து துரைமுருகன் ஆகிய நான் நாலாவது பொதுச் செயலாளராக வந்துள்ளேன். மாதம் ரூ.5,000 கொடுத்து என்னை படிக்க வைத்த எம்.ஜி.ஆர். எனக்கு கடவுள். கட்சிக்கு அல்ல நான் பி.ஏ., படிக்கும் வரை ஷூவே போட்டது இல்லை. முதியோர் உதவித்தொகையை நாம் கொடுத்திருக்க வேண்டும். இதற்கு முதல்-அமைச்சர் உத்தரவு போட்டும் அதிகாரிகள் நம் வழியில் இல்லை. சில அதிகாரிகளுக்கு நாம் ஆட்சிக்கு வந்ததே பிடிக்கவில்லை.

கிளை கூட்டங்கள்

கட்சிக்காரர்கள் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. உங்களுக்கு எந்தவித சேதாரமும் இல்லாமல் ஒழுங்காக கொடுப்போம். நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. நாம் இல்லாமல் ஆட்சி இல்லை. நம்மை விட நம் கட்சி பெரியது. எனக்கு கஷ்டம் தரக்கூடாது என்பதற்காக என் இலகாவாக இருந்தாலும் பரவாயில்லை என்று சீர்காழி பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியை முதல்-அமைச்சர் பார்வையிட சென்று விட்டார். நாங்கள் எந்த மந்திரியும் தூங்குவதுமில்லை, விளையாட்டாக இருப்பதும் இல்லை.

நமக்கு வாய்த்த கவர்னர் நமக்கு ஏற்றபடி இல்லை. உங்களுடைய எண்ணங்களை நிச்சயமாகப் பூர்த்தி செய்வோம். ஒவ்வொரு ஒன்றிய செயலாளர்களும் கே.வி. குப்பத்தில் உள்ள 39 ஊராட்சிகளுக்கும் சென்று அடுத்த மாதம் 20-ந் தேதிக்குள் கிளைக் கழக கூட்டங்களை நடத்த வேண்டும். இதை செய்யத் தவறிய ஒன்றிய செயலாளர்கள் நிச்சயமாக மாற்றப்படுவார்கள். கட்சி வளர்ச்சிக்காக உழைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கட்சியின் கட்டுப்பாட்டுக்கு அடங்காதவர்கள் தேவையில்லை. அனைத்து ஒன்றிய செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story