மத மோதலை உருவாக்கி ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது; ஈரோட்டில் முத்தரசன் பேட்டி


மத மோதலை உருவாக்கி ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது; ஈரோட்டில் முத்தரசன் பேட்டி
x

மத மோதலை உருவாக்கி ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று ஈரோட்டில் முத்தரசன் கூறினார்.

ஈரோடு

மத மோதலை உருவாக்கி ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று ஈரோட்டில் முத்தரசன் கூறினார்.

நாடு தயாராகிவிட்டது

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிதியளிப்பு பேரவைக்கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடு தயாராகிவிட்டது. பா.ஜ.க.வை கொள்கை ரீதியாக எதிர்க்கும் 26 கட்சிகள் இந்தியா எனும் பெயரில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க தயாராக உள்ளன. ஆனால் பா.ஜ.க. அரசு, இதனை அரசியல் ரீதியாக சந்திக்க எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

2014-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார். அப்போது குஜராத் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவிக்கப்பட்டனர். அது அங்கு, பா.ஜ.க. ஆட்சியை நிலை நிறுத்தியதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மோடிக்கு கொடுக்கப்பட்ட பரிசு.

பா.ஜ.க. முயற்சி

தற்போது தேர்தலையும் கலவரத்தின் மூலமாக எதிர் கொள்ளும் வேலையை ஆளும் பா.ஜ.க. அரசு மணிப்பூரில் தொடங்கியுள்ளது. அரியானாவிலும் அதை அரங்கேற்றி வருகிறது. அங்கு கலவரத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அரியானாவில் மட்டும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என கூறி 250-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளை இடித்து தள்ளுவது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை.

மத மோதல், மொழி மோதலை உருவாக்கி 3-வது முறையாக தங்களது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.க.வினர் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

பேட்டியின்போது அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் துளசிமணி உள்பட பலர் இருந்தனர்.


Next Story