பா.ஜனதா நிர்வாகி தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்


பா.ஜனதா நிர்வாகி தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரம் தொடர்பாக பா.ஜனதா நிர்வாகி ஜாமீன் கேட்டு தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜரானார்.

தூத்துக்குடி

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரம் தொடர்பாக தூத்துக்குடியில் பா.ஜனதா நிர்வாகியிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.

வடமாநில தொழிலாளர்கள் வீடியோ

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 153, 153 (ஏ), 504, 505 (1) (பி), 505 (1) (சி), 505 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீஸ் நிலையத்தில் ஆஜர்

தொடர்ந்து பிரசாந்த் உம்ராவை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். அப்போது, விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 10-ந் தேதி தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக பிரசாந்த் உம்ராவ் ஆஜரானார். அவரிடம் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் விசாரணை நடத்தி, மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

மீண்டும் விசாரணை

இந்த நிலையில் பிரசாந்த் உம்ராவ் நேற்று தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜாமீனுக்காக அபிடவிட் மனு தாக்கல் செய்தார். அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு விசாரணைக்காக தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் மீண்டும் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக பிரசாந்த் உம்ராவின் வக்கீல் ராமசுப்பு கூறுகையில், "பிரசாந்த் உம்ராவ் போலீஸ் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து உள்ளார். மேலும் இவரை 2 நாட்களுக்கு ஒரு முறை விசாரணை என்ற முறையில் துன்புறுத்த வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டு வருவதாக கூறப்படுகிறது. கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப போலீசார் நடக்க வேண்டும்" என்றார்.


Next Story