தமிழகத்திற்கு பாஜக எதுவும் செய்யவில்லை: அமித்ஷா கூறுவது அப்பட்டமான பொய் கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு


தமிழகத்திற்கு பாஜக எதுவும் செய்யவில்லை: அமித்ஷா கூறுவது அப்பட்டமான பொய் கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 6:44 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திற்கு பா.ஜ.க. எதுவும் செய்யவில்லை என்றும், அமித்ஷா கூறுவது அப்பட்டமான பொய் என்றும் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.

கடலூர்

சிதம்பரம்,


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சிதம்பரத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அப்பட்டமான பொய்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல் நிறைந்த அரசாங்கம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான பொய். மன்மோகன்சிங் போன்ற நேர்மையான, நியாயமான பிரதமராக ஒரு காலத்திலும் மோடி இருக்க முடியாது.

மத்திய அரசு 9 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமித்ஷா பதில் சொல்லி உள்ளார். நாங்கள் 58 ஆயிரம் கோடி ரூபாய் நெடுஞ்சாலைக்காக அரசுக்கு கொடுத்திருக்கிறோம் என கூறியுள்ளார். அது தவறானது. வழக்கமாக வழங்கப்படும் தொகை ஒரு மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை எங்கெங்கு உள்ளதோ அதனுடைய மேம்பாட்டிற்காக பணிகளுக்காக வழங்கப்படும் தொகையாகும். 9 ஆண்டுகளில் புதிதாக எந்த திட்டத்திற்கும் நிதி வழங்கப்படவில்லை.

ஆதரிக்கிறோம்

தமிழகத்திற்கு துரும்பு கூட செய்யவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 7 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டு கட்டிடம் கட்டப்படவில்லை. ஆனால் தமிழகத்திற்கு வந்துள்ள அமித்ஷா தவறான தகவல்களை, உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.

ஒரு தமிழர் பிரதமராக வருவார் என்று சொல்கிறார். எங்களுக்கு அந்த ஆசை உண்டு. என்ன அண்ணாமலை அல்லது முருகனை பிரதமராக கொண்டு வரப் போகிறீர்களா? இதை நாளைக்கு செய்யலாமே. யாரை கொண்டு வருகிறீர்கள் என சொல்லுங்கள், நாங்கள் ஆதரிக்கிறோம்.

இதைவிட அப்பட்டமான பொய் காமராஜர், மூப்பனார் பிரதமராக வருவதை தி.மு.க. தடுத்ததாக கூறியுள்ளது. காமராஜர் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட விரும்பாமல் இந்திராகாந்தி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரை பிரதமராக்கினார். தற்போது கருணாநிதி, முரசொலி மாறன் உயிரோடு இல்லை. ஆனால் அப்போது கருணாநிதி, மாறனை அனுப்பி மூப்பனாரிடம் பிரதமர் பதவி விருப்பம் குறித்து கேட்ட போது, அதற்கு மூப்பனார் கடுமையாக மறுத்துவிட்டார். லாலுபிரசாத் யாதவ் நேரடியாக மூப்பனாரிடம் பேசிய போது, பிரதமர் பதவி வேண்டாம் என மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். எனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா பொய் சொல்லக்கூடாது.

வெற்றிபெற இடமில்லை

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றியடையும் என கூறுகிறார். தமிழகத்தில் பலமான இயக்கமாக அ.தி.மு.க. இருந்த போது கூட்டணி வைத்து 4 தொகுதிகளில்தான் வெற்றி பெற முடிந்தது. தற்போது தமிழகத்திற்கு 25 தொகுதியில் வெற்றி பெற இடமில்லை. தமிழக பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. ஏதாவது செய்துவிட்டு வந்து வாக்கு கேளுங்கள்.

வெளிநாட்டிற்கு சென்று ராகுல்காந்தி இந்தியாவை விமர்சிக்கவில்லை. செய்தியாளர்கள் மோடியை பற்றி கேட்ட போது மோடியைதான் விமர்சித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சிக்கு ராகுல்காந்திக்கு அடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் இலக்கு. யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இந்தியாவில் மதச்சார்பற்ற அணியின் முன்னணி தலைவராக உள்ளார். எனவே மு.க.ஸ்டாலினை குறி வைத்து அவரது ஆட்சியில் ஊழல் நடைபெறுகிறது என கூறுகின்றனர். மு.க.ஸ்டாலினை அப்புறப்படுத்தும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு சிறுவன் 2 இஸ்லாமியர்களை சுட்டு கொன்றுள்ளனர். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை விட தமிழகம் அமைதி பூங்காவாக விளங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story