தமிழகம்- புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற பணியாற்ற வேண்டும்


தமிழகம்- புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற பணியாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 13 Jun 2023 1:00 AM IST (Updated: 13 Jun 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்- புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற பணியாற்ற வேண்டும் என்று ஓசூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பேசினார்..

பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஓசூர் ராம்நகரில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

மத்திய பா.ஜனதா ஆட்சியால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. 9 ஆண்டுகளாக பா.ஜனதா என்ன செய்துள்ளது என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார். 9 ஆண்டுகளாக மத்திய அரசின் திட்டங்கள் வாயிலாக இங்கு அமர்ந்துள்ளீர்கள்.

ஒவ்வொரு தனியார் கல்லூரி சீட்டுகளும் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டன. நீட் வந்த பிறகு எல்லாரும் ஒரு தேர்வு எழுத வேண்டும். தேர்ச்சி பெற்றால் கவுன்சிலிங் செல்ல வேண்டும். நீட் வந்த பிறகு ஏழை மாணவ, மாணவிகள் பலரும் அரசு கல்லூரிக்கு சென்றுள்ளார்கள். இதை பொறுக்க முடியாமல் தி.மு.க. நீட்டை எதிர்த்து வருகிறார்கள்.

40-க்கு 40 வெற்றி

பா.ஜனதா மக்களுக்கான அரசு. நாம் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளையும், 2 ஆண்டு கால தி.மு.க. அரசின் வேதனைகளையும் மக்களிடம் கூற வேண்டும். அமித்ஷா சென்னை வந்து சென்றது முதல் தி.மு.க.வினருக்கு காய்ச்சல் வந்து விட்டது. பா.ஜனதாவில் தான் தொண்டர் கூட உயர்ந்த பொறுப்புக்கு செல்ல முடியும் என அமித்ஷா கூறியுள்ளார். அவர் கூறியது முதல் தி.மு.க.வினர் என்னென்னவோ பேசி வருகிறார்கள். தி.மு.க.வில் உயர்ந்த பொறுப்புக்கு யாரும் போக முடியாது.

தமிழகத்தில் இன்று அரசியல் மாற்றம் கட்டாயம் தேவை. அதை பா.ஜனதா கட்டாயம் செய்யும். அதற்கான அடித்தளமாக தான் இந்த கூட்டம் உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 40-க்கு 40 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று, வெற்றியை மோடிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், மாநில நிர்வாகிகள் கே.எஸ்.நரேந்திரன், பாலகிருஷ்ணன், நரசிம்மன், மாவட்ட தலைவர்கள் நாகராஜ் (கிருஷ்ணகிரி மேற்கு), சிவப்பிரகாசம் (கிருஷ்ணகிரி கிழக்கு), மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வி.எம்.அன்பரசன், தொழில் துறை பிரிவு மாநில செயலாளர் ராமலிங்கம், அமைப்பு சாரா பிரிவு மாநில துணை செயலாளர் சீனிவாசன், இளைஞர் அணி மாநில செயலாளர் எம்.என்.கிஷோர், ஊடகப் பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் மல்லேஷ்ரெட்டி, இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் வீரேந்திரா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story