கோவிலை இடிக்க பா.ஜ.க., இந்து முன்னணி எதிர்ப்பு
உத்தமபாளையத்தில் கோவிலை இடிக்க பா.ஜ.க., இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
உத்தமபாளையம் பஸ்நிலையம் எதிரே உள்ள வீதியில் மாடசாமி கோவில் பீடம் உள்ளது. இந்த நிலையில் கோவில் பீடம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. என்று அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்தது. இந்த நிலையில் அந்த கோவில் பீடத்தை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்துக்கு, கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று கோவில் பீடத்தை அகற்ற பேரூராட்சி நிர்வாகம், வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் திரண்டு வந்து கோவில் பீடத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கோவில் பீடத்தை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டியன், தாசில்தார் சந்திரசேகர் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கோர்ட்டு உத்தரவுப்படி கோவில் பீடத்தை அகற்றுவதாக உத்தரவு நகலை காண்பித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். பின்னர் பேரூராட்சி பணியாளர்கள் கோவில் பீடத்தை அகற்றினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.