ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பா.ஜ.க. வளர முடியாது
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பா.ஜ.க. வளர முடியாது என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறினார்.
குத்தாலம்:
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பா.ஜ.க. வளர முடியாது என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறினார்.
பொதுக்கூட்டம்
மயிலாடுதுறை அருேக உள்ள குத்தாலம் நகர பூங்காவில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். குத்தாலம் ஒன்றிய தலைவர் முருகையன், நகர தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் தளபதிராஜ் வரவேற்றார். கூட்டத்தில் 100 வயதை கடந்த திராவிடர் கழக மூத்த முன்னோடி கொக்கூர் கோவிந்தசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
குலக்கல்வி திட்டம்
பகுத்தறிவு என்பதே விஞ்ஞானம்தான். இப்போது, சில அரைவேக்காடுகள் திராவிட மாடல் ஆட்சியை கவிழ்த்து விடுவதாக கூறுகின்றனர். அரசியல் சட்டம், சாதி ஒழிப்புக்கு எதிராக உள்ளதாக பெரியார் எதிர்ப்பு தெரிவித்தார். அதனை மாற்றுவதற்கு கால அவகாசமும் அளித்தார். ஆனால், அதன் பின்னரும் அதனை மாற்றாத காரணத்தால் அரசியல் சட்ட நகல் எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்.திராவிடர் கழகம் மட்டும் இல்லை என்றால் நாட்டில் குலக்கல்வி திட்டம் தான் இருந்திருக்கும். நம்மில் பலரது மகன்கள் பட்டதாரிகளாகவும், டாக்டர்களாகவும், அறிஞர்களாகவும் இருந்திருக்க முடியாது. சமஸ்கிருதம் படித்தவர்கள்தான் டாக்டர்களாக, வக்கீல் களாகவும் இருந்திருப்பார்கள்.
பா.ஜ.க. வளர முடியாது
இப்போது நீட் தேர்வை நடத்துகின்றனர். ஆனால், ஒரு ஆண்டாவது நீட் தேர்வு ஊழல் இல்லாமல் நடந்திருக்கிறதா? அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வழி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சி.அ.தி.மு.க. தனது கட்சியை டெல்லியில் அடமானம் வைத்து விட்டது. தன்மானத்தோடு செயல்படுவது திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் திராவிட இயக்கங்கள்தான். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பா.ஜ.க. வளர முடியாது என்றார்.கூட்டத்தில், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் எம்.எல் ஏ, தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், குத்தாலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மங்கை.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் இளமாறன் நன்றி கூறினார்.