மக்களிடையே பா.ஜனதா வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது -ராகுல்காந்தி பேச்சு


மக்களிடையே பா.ஜனதா வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது -ராகுல்காந்தி பேச்சு
x

கேரளாவில் இருந்து கூடலூருக்கு ராகுல்காந்தி பாதயாத்திரையாக வந்தார். மக்களிடையே பா.ஜனதா வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது என்று அவர் பேசினார்.

கூடலூர்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7-ந்தேதி தொடங்கினார். தொடர்ந்து கேரள மாநிலத்தில் பாதயாத்திரை சென்ற அவர், 23-வது நாளான நேற்று காலை 11 மணிக்கு மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக தமிழக பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்தை வந்தடைந்தார்.

அப்போது அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் வரவேற்பு அளித்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் வேனில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். தொடர்ந்து கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

குறைகளை கேட்டார்

பின்னர் பகல் 3 மணிக்கு அரசு தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள், தேயிலை விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டார். இதேபோல் கூடலூர் பகுதியில் நிலவும் நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கட்சியினர் மனுக்கள் அளித்தனர். மாலை 4.30 மணிக்கு கோழிப்பாலம் அரசு கல்லூரி வளாகத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினார்.

புதிய பஸ் நிலையம் அருகே உள்ள 5 முனை சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மேடைக்கு ராகுல்காந்தி வந்தடைந்தார். அப்போது வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நின்றபடி ராகுல்காந்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னர்களின் தலையீடு

எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களில் கவர்னர்களின் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது.

இன்றைக்கு நாட்டில் இருக்கும் நிலையை கவனித்தால், பா.ஜனதா பரப்பி வரும் வெறுப்பு தன்மை மற்றும் கசப்பு தன்மையால் மக்களிடம் வெறுப்பு தான் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. மேலும் மக்களிடையே வெறுப்பு அரசியலைதான் பா.ஜனதா பரப்பி வருகிறது. தற்போது இந்தியா வேலையில்லாத திண்டாட்டத்தை சந்தித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகத்தில் பாதயாத்திரை

ராகுல்காந்தி இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு கூடலூரில் இருந்து புறப்பட்டு முதுமலை வழியாக கர்நாடக மாநிலத்துக்கு சென்று பாதயாத்திரையை தொடர்கிறார். அங்கு அவரது பாதயாத்திரை 21 நாட்கள் நடக்கிறது.


Next Story