பா.ஜ.க.-விடுதலை சிறுத்தைகள் வாக்குவாதம்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் விவகாரத்தில் பா.ஜ.க.-விடுதலை சிறுத்தைகள் வாக்குவாதம் செய்து கொண்டனர்.
மதுரை பெருங்குடி விமான நிலைய சாலையில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அந்த சிலைக்கு மாலை அணிவிக்க மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமார் தலைமையில் பா.ஜ.க.வினர் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு வந்தனர்.
அப்போது சிலை அருகில் நின்று கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அவர்களை தடுத்து நிறுத்தி பா.ஜ.க. கொடி இல்லாமல் சென்று மாலை அணிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் அந்த இரு கட்சியை சேர்ந்தவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பா.ஜ.க.வினர் கட்சி கொடி இல்லாமல் மாலை அணிவித்து மரியாதை செய்து கொள்கிறோம் என்றனர். ஆனால் அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து, நாளைக்கு (அதாவது இன்று) தனியாக நேரம் ஒதுக்கி தருவதாக கூறினர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பா.ஜ.க.வினர் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க.வினருக்கு, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி வழங்கக்கூடாது என கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அனுமதி இன்றி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க திரண்டதாக கூறி பா.ஜ.க. மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் உள்ளிட்ட 20 பேரை அவனியாபுரம் போலீசார், கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.