தூத்துக்குடி, கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி, கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடி, கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி, கோவில்பட்டியில் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து, தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பி.வாரியார் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் எஸ்.சத்தியசீலன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாவட்ட பார்வையாளர் நீலமுரளி யாதவ் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மாநில பிரசார பிரிவு செயலாளர் விக்னேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பால்ராஜ், ஓ.பி.சி. அணி மாநில துணைத்தலைவர் ரமேஷ், மாநில விருந்தோம்பல் பிரிவு செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி மெயின் ரோடு தனியார் விடுதி எதிரில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமை தாங்கினார்.

மாநில மகளிர் அணி தலைவி உமா ரதி, மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன், மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன், ஒன்றிய தலைவர்கள் ஜெகதீஷ், கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story