கச்சத்தீவை மத்திய அரசு நிச்சயம் மீட்கும்


கச்சத்தீவை மத்திய அரசு நிச்சயம் மீட்கும்
x

கச்சத்தீவை மத்திய அரசு நிச்சயம் மீட்கும் என பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் கூறினார்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எதை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து மக்களுக்காக சேவையாற்றுபவர் பிரதமர் மோடி. ஆனால் தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நேரத்தில் சாராயம், கொலுசு, மூக்குத்தி, 2000 ரூபாய் ஓட்டுக்கு கொடுக்கிறார்கள். மின் கட்டணத்தை குறைப்போம் என கூறிவிட்டு, தற்போது மின் கட்டணத்தை உயர்த்த கருத்து கேட்கிறார்கள்.

தி.மு.க. சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் முதல்-அமைச்சர் தாங்கள் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூறிவருகிறார். தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. இந்த ஆட்சியில் இந்து மதத்தின் நம்பிக்கை தொடர்ந்து இழிவுபடுத்தப்பட்டு வருகிறது.

தி.மு.க.வும், காங்கிரசும் இலங்கைக்கு வாரி வழங்கிய கச்சத்தீவை மோடி அரசு நிச்சயமாக மீட்கும். தமிழகத்தில் தி.மு.க. அரசு வந்த பிறகுதான் வெளிப்படையாகவே பிரிவினைவாதம் பேசுகிறார்கள். இதை தடுக்காவிட்டால் தமிழகம் அமைதி பூங்காவாக திகழாது. வாக்கு வாங்கிக்காக இல்லாமல் நேர்மையாக தமிழக முதல்வர் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பா.ஜனதா வடக்கு ஒன்றிய செயலாளர் வசீகரன், மாவட்ட ஊடக பிரிவு துணை தலைவர் முத்து பிரகாஷ், கூட்டுறவு பிரிவு செயலாளர் சுவாமிநாதன், செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், தெற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் இளையராஜா, இளைஞரணி ஒன்றிய தலைவர் ரமேஷ், முன்னாள் ஒன்றிய பொதுச்செயலாளர் ரமேஷ், லோகேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இப்ராகிம் சிங்கம்புணரி சேவுகபெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.



Next Story