பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கைது


குடியாத்தத்தில் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டுபிரசுரம் வழங்கினார். அவருக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

துண்டுபிரசுரம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய பா.ஜ.க. அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கட்சி நிர்வாகிகளுடன் குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட சில பகுதிகளில் துண்டு பிரசுரங்களை கடைகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினார்.

முஸ்லிம்கள் எதிர்ப்பு

தொடர்ந்து ஐயா தெருவில் உள்ள கட்சி நிர்வாகி வீட்டிற்கு சென்றார். பின்னர் மற்ற பகுதிகளுக்கு செல்ல முயன்றார். அப்போது வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகளிடம், போலீசார் மேற்கொண்டு செல்ல வேண்டாம் எனவும், அவர்களுக்கு உரிய அனுமதி இல்லை எனவும் தெரிவித்தனர். இருப்பினும் தரணம்பேட்டை பிள்ளையார் கோவில் தெரு வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்ல முயற்சித்தனர்.

அப்போது பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் வந்த தகவல் அறிந்ததும் தரணம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு வந்து இப்ராஹிம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

கைது

இதனால் வேலூர் இப்ராஹிம் மற்றும் கட்சி நிர்வாகிகளை மேற்கொண்டு செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். ஆனால் அவர்கள் அதையும் மீறி செல்ல முயற்சித்தனர். இதனால் மேற்கொண்டு அங்கு அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் சென்று வேலூர் இப்ராஹிம், குடியாத்தம் நகர தலைவர் சாய் ஆனந்தன், மாவட்ட செயலாளர் லோகேஷ் குமார் உள்பட ஏராளமான பா.ஜ.க.வினரை கைது செய்து, கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

வேலூர் இப்ராஹிம் வருவதை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story