பா.ஜ.க. தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வருகைக்கு எதிர்ப்பு


பா.ஜ.க. தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வருகைக்கு எதிர்ப்பு
x

பேரணாம்பட்டில் பா.ஜ.க. தேசிய சிறுபான்மை அணி செயலாளர் இப்ராஹிம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

வேலூர்

எதிர்ப்பு

மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனைகளையும், பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமிய மக்களுக்கு செய்துள்ள சாதனைகள் குறித்து பேரணாம்பட்டில் பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரங்களை பா.ஜ.க. தேசிய சிறுபான்மை அணி செயலாளர் இப்ராஹிம் கலந்து கொண்டு நேற்று வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் திரண்டு பேரணாம்பட்டில் நான்கு கம்பம் பகுதியில் கூடி பேரணாம்பட்டு நகருக்குள் பா.ஜ.க. தேசிய சிறுபான்மை அணி செயலாளர் இப்ராஹிம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், லட்சுமி, சியாமளா, செந்தில்குமார் மற்றும் 5 சப்- இன்ஸ்பெக்டர்கள், 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தடுத்து நிறுத்தம்

குடியாத்தம் வழியாக பேரணாம்பட்டு நகருக்குள் அவர் வருவதாக போலீசார் எதிர்நோக்கி பங்களாமேடு பகுதியில் காத்திருந்தனர். ஆனால் அவர் மாதனூர், மேல்பட்டி வழியாக பேரணாம்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தார். இதனையறிந்த போலீசார் விரைந்து சென்று பேரணாம்பட்டு அருகே கொத்தப்பல்லி கூட்ரோட்டில் அவரை தடுத்து நிறுத்தினர்.

இதனை ஏற்று அவர் ஏரிக்குத்தி கிராமத்திற்கு சென்று பேரணாம்பட்டு ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்து விட்டு செல்வதாக தெரிவித்தார். அதன்படி ஏரிக்குத்தி கிராமத்திற்கு சென்று பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வேலூர் மாவட்ட செயலாளர் தினேஷ், மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் அருண், மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் ரேகா, நகர தலைவர் பாபு மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story