பா.ஜ.க. மாற்றுத்திறனாளி தொண்டருடன் 'செல்பி' எடுத்த பிரதமர் மோடி


பா.ஜ.க. மாற்றுத்திறனாளி தொண்டருடன் செல்பி எடுத்த பிரதமர் மோடி
x

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க. மாற்றுத்திறனாளி தொண்டருடன் ‘செல்பி' எடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி ரூ.6 ஆயிரத்து 445 கோடி திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவருக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க.வினர் பூக்களை தூவியும், ஆட்டம்.., பாட்டம்..., கொண்டாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற விழா முடிவடைந்ததும் பிரதமர் நரேந்திர மோடியை வழி அனுப்புவதற்காக விமான நிலையத்தில் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் திரண்டிருந்தனர். அவர்களுடன் ஈரோட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி தொண்டர் மணிகண்டனுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது.

அவர் 3 சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் கனிவுடன் பேசினார். அவரது குடும்பத்தினர் குறித்தும் அக்கறையுடன் கேட்டறிந்தார். அப்போது மணிகண்டன் பிரதமர் நரேந்திர மோடியிடம், நான் உங்களுடன் ஒரு 'செல்பி' எடுத்துக் கொள்ளட்டுமா? என்று தயங்கியபடி கேட்டுள்ளார்.

அடுத்த கணமே பிரதமர் நரேந்திர மோடி மணிகண்டனின் செல்போனை வாங்கி புன்னகை பூத்த முகத்துடன் 'செல்பி' எடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

டுவிட்டரில் பகிர்ந்தார்

மேலும் மணிகண்டனுடன் எடுத்துக்கொண்ட 'செல்பி' புகைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இது ஒரு சிறப்பு 'செல்பி'. சென்னையில் எஸ்.மணிகண்டனை சந்தித்தேன். அவர் ஈரோட்டை சேர்ந்த ஒரு பெருமை மிக்க பாரதீய ஜனதா கட்சிக்காரர். பூத் நிலை முகவராக இருக்கிறார். அவர் ஒரு மாற்றுத்திறனாளி. சொந்தமாக கடை நடத்துகிறார்.

மேலும் ஊக்கமளிக்கும் அம்சம் என்னவென்றால் அவர் தனது தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பா.ஜ.க.வுக்கு கொடுக்கிறார். மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன். அவரது வாழ்க்கை பயணம் மற்றும் நமது கட்சி, நமது சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி அனைவரையும் ஊக்குவிக்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளி தொண்டர் நெகிழ்ச்சி

பிரதமருடன் 'செல்பி' எடுத்த நெகிழ்ச்சியில் மணிகண்டன் கூறியதாவது:-

நான் கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் உறுப்பினராக இருக்கிறேன். சிறிய பெட்டி கடை நடத்தி வருகிறேன். பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவரை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. எனவே சென்னை வந்தேன்.

விமான நிலையத்தில் அவரை வழியனுப்பும் நிர்வாகிகளுடன் நிற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பிரதமர் நரேந்திர மோடி எனது அருகே வந்து மிகவும் அன்பாக பேசினார். உங்களுடன் 'செல்பி' எடுக்க வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்தவுடன் அவரே எனது செல்போனை வாங்கி 'செல்பி' எடுத்தார்.

இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் ஆகும். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதற்காக நான் கடுமையாக கட்சி பணியாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story