பா.ஜ.க. மாவட்ட தலைவருடன் போலீசார் வாக்குவாதம்


பா.ஜ.க. மாவட்ட தலைவருடன் போலீசார் வாக்குவாதம்
x

சிவகாசியில் பா.ஜ.க. மாவட்ட தலைவருடன், போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனையை விளக்கி தமிழகத்தின் இளைஞர் அணியினர் மோட்டார் சைக்கிள் பிரசாரம் செய்து வருகிறார்கள் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பிரசாரம் நேற்று விருதுநகர் மாவட்டத்திற்கு வந்தது. மாவட்ட எல்லையான சாத்தூருக்கு சென்று கட்சி தொண்டர்களை வரவேற்க சுரேஷ் தயார் ஆனார். மேலும் பிரசார பேரணிக்கு மாவட்ட தலைவர் சுரேஷ் அனுமதி கேட்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை திருத்தங்கலில் உள்ள சுரேஷ் வீட்டிற்கு வந்த போலீசார் பிரசாரப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், அதிக எண்ணிக்கையிலான காரில் சென்று கலந்து கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருத்தங்கல் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்த மாவட்ட தலைவர் சுரேசை, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுபக்குமார் தடுத்து நிறுத்தி அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் பிரசாரத்துக்கு செல்லக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க. மாவட்டத்தலைவர் சுரேஷ் சாலையில் அமர்ந்து மறியல் செய்தார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமாருக்கும், மாவட்ட தலைவர் சுரேசுக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. பின்னர் ஒரே ஒரு வாகனத்தில் மட்டும் பிரசாரத்துக்கு செல்ல அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் சுரேஷ் கட்சி நிர்வாகிகளுடன் தனது காரில் சாத்தூர் நோக்கி சென்றார். இந்த சம்பவத்தால் திருத்தங்கல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கமலப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையை பார்வையிட்ட இளைஞர் அணி மாநில தலைவர் ரமேஷ்சிவா பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-பட்டாசு தொழிலுக்கு பிரச்சினை ஏற்பட்டபோது பா.ஜ.க.தான் அந்த பிரச்சினைகளை தீர்த்தது. பட்டாசு தொழில் பா.ஜ.க.ஆட்சியில் தான் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது விருதுநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் உள்பட பலர் இருந்தனர்.



Next Story