பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் உரிய விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5 முதல் ரூ.15 வரை வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், இதனை கண்டித்து பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே சாந்தநாதபுரத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ள 2 டாஸ்மாக் கடைகள் முன்பு இரும்பு தடுப்புகள் அமைத்து இன்று போலீசார் பாதுகாப்பு ஏற்படுத்தினர். அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் உள்பட நிர்வாகிகள் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு திரண்டு வந்தனர். அவர்களை கடைகளுக்கு முன்பாகவே போலீசார் தடுத்து நிறுத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக அரசுக்கு எதிராகவும், டாஸ்மாக் அதிகாரிகளை கண்டித்தும் கோஷமிட்டனர். ஒரு பாட்டிலுக்கு கூடுதல் விலை வைத்து விற்பதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டினர். இந்த போராட்டத்தினால் பஸ் நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பானது. டாஸ்மாக் கடைகளில் வழக்கம் போல மதுபானம் விற்பனை நடைபெற்றது.