அம்பேத்கர் சிலையிடம் பா.ஜ.க.வினர் மனு வழங்கி நூதன போராட்டம்
வேலூரில் அம்பேத்கர் சிலையிடம் பா.ஜ.க.வினர் மனு வழங்கி நூதன போராட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் வேலூர் மக்கான் சிக்னல் அருகே உள்ள அம்பேத்கர் சிலையிடம் மனு அளிக்கும் நூதன போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் கே.கே.சக்ரவர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
பொதுச் செயலாளர் எல்.எல்.பாபு, பட்டியல் அணி கோட்ட பொறுப்பாளர் நாகலேரி ஆனந்தன், பொதுச் செயலாளர் மதன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், தமிழகத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவர்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை முறையாக செலவு செய்யவில்லை. இதனால் பட்டியல் சமுதாய மக்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், அம்பேத்கர் சிலையிடம் முறையிட்டும் போராட்டம் நடத்தினோம் என்றனர். முன்னதாக அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.