கருப்பு பலூன்களை பறக்க விட்டு பழனியில் பா.ஜ.க.வினர் போராட்டம்


கருப்பு பலூன்களை பறக்க விட்டு பழனியில் பா.ஜ.க.வினர் போராட்டம்
x

தி.மு.க. அரசை கண்டித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டு பழனியில் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கருப்பு பலூன்களை பறக்க விட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி பழனி இட்டேரி சாலையில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன்பு அந்த கட்சியினர் குவிந்தனர். பின்னர் கருப்பு பலூன்களை பறக்க விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். நகர தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி.யும், தேசிய செயற்குழு உறுப்பினருமான கார்வேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கருப்புச்சட்டை அணிந்திருந்தனர்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து, தமிழக மக்களை தி.மு.க. அரசு வஞ்சிப்பதாக குற்றம்சாட்டி கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக கார்வேந்தன் நிருபர்களிடம் கூறுகையில், காவிரியின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதுபற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை. டெல்டா பகுதி விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் வகையில் தி.மு.க. அரசு செயல்படுகிறது. இதனை தமிழக பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசுக்கும், அமலாக்கத்துறைக்கும் சம்பந்தம் இல்லை. அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடியிடம் நடக்கும் அமலாக்கத்துறை விசாரணையில் அரசியல் உள்நோக்கம் கிடையாது. அமலாக்கத்துறை அவர்களுடைய பணியை செய்து வருகின்றனர். தமிழகத்தில் காலையில் மதுக்கடைகளை திறக்கும் நோக்கம் இளைஞர்களை சீரழிக்கும் திட்டம் ஆகும் என்றார்.


Next Story