முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பா.ஜ.க. பிரமுகர்கள் 2 பேர் கைது


முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பா.ஜ.க. பிரமுகர்கள் 2 பேர் கைது
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய பா.ஜ.க. பிரமுகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஜெயக்குமார்(வயது 32). அங்குள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்த இவர் கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஜெயக்குமார் சமூக வலைதளத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நெல்லையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை தேடி சிதம்பரம் வந்தனர்.

இந்த நிலையில் கீரப்பாளையத்தில் ஜெயக்குமார் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். பின்னர் ஜெயக்குமாரை நெல்லைக்கு அழைத்து சென்று அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொருவர் கைது

இதேபோல நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 34). நகை தொழிலாளியான இவர் பா.ஜ.க. பிரமுகராகவும் உள்ளார்.

முத்துக்குமார் சமூக வலைதளங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை பதிவிட்டு அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திசையன்விளை நகர தி.மு.க. செயலாளர் ஜான் கென்னடி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி முத்துக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் சைபர் கிரைம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.


Next Story