பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் உத்தரவிட்டுள்ளார்
சென்னை,
தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசனை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இந்த டுவிட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மதுரை போலீசார் நேற்று பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவை கைது செய்தனர். சென்னை திநகரில் உள்ள எஸ்ஜி சூர்யா வீட்டிற்கு நேற்று இரவு 10 மணியளவில் வந்த மதுரை போலீசார் சூர்யாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை மதுரைக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து போலீசார் , எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
பாஜக மாநில செயலாளர் அதிரடி கைது..தீப்பிடிக்கும் அரசியல் களம் #bjp #tn #statesecretary #arrest #ThanthiTV https://t.co/h9oo40kEZC pic.twitter.com/KZundxSrEa
— Thanthi TV (@ThanthiTV) June 17, 2023