''பா.ஜ.க. தலைமை எங்களுடன் தொடர்பில் இருக்கிறது'' ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
“பா.ஜ.க. தலைமை எங்களுடன் தொடர்பில் தான் இருக்கிறது'', என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நேற்று நடந்தது. இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வலசை மஞ்சுளா, புகழேந்தி, மருது அழகுராஜ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் புரட்சி பயணத்தை எங்கு, எப்போது நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதேபோல அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை நம்ப முடியாது
எடப்பாடி பழனிசாமியை நம்ப முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாங்கள் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா? என்பதை பா.ஜ.க.விடம்தான் கேட்க வேண்டும். தேர்தல் வரும்போது ஆதரவு குறித்து தீர்மானிக்கப்படும். பா.ஜ.க. என்ன செய்யப்போகிறார்கள்? என்பதை பார்த்து, உரிய முடிவுகள் எடுக்கப்படும்.
மறைந்த தலைவர்களை பற்றி அண்ணாமலை எடுத்து பேசிய கருத்துகள் தவறானவை. ஆனால் அவர் உள்நோக்கத்துடன் பேசினார் என்று சொல்லமாட்டேன். அண்ணாவை பற்றி அண்ணாமலை விமர்சித்ததால் வந்த பிரச்சினை அல்ல இது. அந்த கூட்டத்தில், '2026-ம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்' என்று அண்ணாமலை பேசினார். அப்போதுதான் எடப்பாடி பழனிசாமி விழித்துக்கொண்டார். அதுதான் பிரச்சினைக்கு காரணம். அண்ணா, ஜெயலலிதா பற்றி விமர்சித்ததை எடப்பாடி பழனிசாமி பெரிதுபடுத்தவில்லை. 2026-ம் ஆண்டு தேர்தலில் முதல்-அமைச்சராக தன்னை பா.ஜ.க. தலைமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் பிரச்சினை.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. தலைமை தொடர்பில் இருக்கிறார்கள்
அதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
கடந்த ஒரு மாத காலமாக பா.ஜ.க. மத்திய தலைமையில் இருந்து தினமும் எங்களை தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். படிப்படியாக நல்ல நிகழ்வுகள் நடைபெறும். அவர்களுடன் நானும், டி.டி.வி.தினகரனும் தொடர்பில் இருந்து வருகிறோம். தேர்தல் வருகிற போது முறையாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று சொல்லி வருகிறார்கள்.
தேசிய அளவில் கட்சி நடத்துகிறவர்கள்தான் இந்தியாவை ஆளமுடியும் என்ற சூழல் இருக்கிறது. பா.ஜ.க. 2 முறை ஆட்சி செய்து, 3-வது தடவை ஆள்வதற்கு உரிய தகுதியை பெற்றிருக்கிறது. எனவே பா.ஜ.க. தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை தெரிவிக்கட்டும். அதன்பிறகு எங்கள் முடிவை சொல்கிறோம்.
நம்பிக்கை துரோகம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அவரை (எடப்பாடி பழனிசாமி), தனது அருகிலேயே அமர வைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. அப்படி அறிவித்த தலைமைக்கு, தொடர்ந்து நம்பிக்கை துரோகம் செய்யலாமா?. அந்த கூட்டத்தில் ஒருமாதிரி பேசிவிட்டு, இங்கு வந்து தமிழகத்துக்கு நாங்கள் தான் தலைமை என்று பேசியதால் தான் பிரச்சினையே வந்தது. இணக்கமான சூழலில் கூட்டணி கட்சிகளுடன் பேசும்போது மூளையை பயன்படுத்தி பேச வேண்டும்.
கூட்டணி இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்க எங்களால் முடியும். அ.தி.மு.க.வினர் வாக்கு என்றுமே சிதறாது.
இவ்வாறு அவர் கூறினார்.