திண்டிவனத்தில்பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்புஇரு கட்சியினரும் போட்டி போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


திண்டிவனத்தில்பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்புஇரு கட்சியினரும் போட்டி போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருகட்சியினரும் போட்டி போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

திண்டிவனம்,

பா.ஜ.க. பொதுக்கூட்டம்

திண்டிவனம் வ.உ.சி திடலில் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் 8 ஆண்டு கால சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற இருந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டு பேச இருந்தனர்.

இதை அறிந்த விழுப்புரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சேரன் உள்ளிட்டோர், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தொல்.திருமாவளவன் எம்.பி. பற்றி அவதூறாக பேசி வரும் எச்.ராஜா திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கூடாது, மீறினால் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர்.

பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம்

இதனிடையே நேற்று காலை திண்டிவனம் மேம்பாலம் பஸ் நிறுத்தம் அருகே சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் செங்கல்லை வீசிவிட்டு, தப்பிச் சென்றனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் திண்டிவனம் நகரில் குவிக்கப்பட்டனர். மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உருவானதால் போலீசார், பா.ஜ.க. நிர்வாகிகளிடம் பொதுக்கூட்டம் நடத்தவேண்டாம் என அறிவுறுத்தினர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எச்.ராஜா கைது

இதற்கிடையே திண்டிவனம் நோக்கி வந்த வேலூர் சையத் இப்ராகிம் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மதுராந்தகம் அருகே நேற்று கைது செய்யப்பட்டார். இதேபோல் காரைக்குடியில் இருந்து திண்டிவனம் நோக்கி காரில் வந்த எச்.ராஜாவை நேற்று மாலை பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் வைத்து கடலூர் மாவட்ட போலீசார் தடையை மீறி செல்வதாக கூறி கைது செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர்-கடலூர் மாவட்ட பா.ஜ.க.வினர் அங்கு வந்து, திடீரென்று எச்.ராஜாவின் கார் முன்பு அமர்ந்து, அவரை கைது செய்ய விடமாட்டோம் என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தை அறிந்த பா.ஜ.க.வினர் திண்டிவனம் பொதுக்கூட்ட மேடையில் ஏறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும், தி.மு.க. அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பியதோடு, திருமாவளவன் உருவ படத்தை எரிக்க முயன்றனர். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திண்டிவனம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 200 பேரை கைது செய்தனர்.

இதேபோல் கண்டமங்கலம் பகுதியில் இருந்து திண்டிவனம் வர முயன்ற பா.ஜ.க.வினர் 61 பேரை போலீசார் முன்னெச்சரிக்கையாக விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கைது செய்தனர்.

போலீஸ் குவிப்பு

இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன் தலைமையில் அக்கட்சியினர் எச்.ராஜாவை கண்டித்து திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே பஸ் கண்ணாடியை உடைத்ததாக வி.சி.க. பிரமுகரான திண்டிவனம் தென்னரசு என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் திண்டிவனத்தில் நடக்க இருந்த பா.ஜ.க. பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் திண்டிவனம் நகரில் தொடா்ந்து பதற்றம் நிலவுவதால் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் திண்டிவனத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். எச்.ராஜா மற்றும் பா.ஜ.க.வினர் கைதை கண்டித்து விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் கலிவரதன் உள்ளிட்ட கட்சியினர் 46 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story