பழங்குடியினர் பட்டியலில் படுகரை சேர்க்க பா.ஜ.க. தொடர்ந்து பாடுபடும் -அண்ணாமலை அறிக்கை


பழங்குடியினர் பட்டியலில் படுகரை சேர்க்க பா.ஜ.க. தொடர்ந்து பாடுபடும் -அண்ணாமலை அறிக்கை
x

பழங்குடியினர் பட்டியலில் படுகரை சேர்க்க தமிழக பா.ஜ.க. தொடர்ந்து பாடுபடும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

எந்த கமிட்டி வந்தாலும், யார் முயற்சி செய்தாலும் படுகரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முடியாது என்று அமைச்சர் ராமச்சந்திரன் சொல்லியிருப்பது வேதனைக்குரிய செய்தி. தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி மத்திய-மாநில ஆட்சிப்பொறுப்பில் பலமுறை இருந்தபோதும் ஏன் படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை?. ஆட்சியில் இருந்த காலங்களில் எல்லாம் படுகர் இன மக்களின் நியாயமான கோரிக்கைகளை எல்லாம் மறுத்து காலங்காலமாக தி.மு.க. அரசு தடுத்து வந்தது.

தமிழகம் முழுவதும் அமைச்சர் ராமச்சந்திரனின் பொறுப்பற்ற பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு வழக்கம்போல மத்திய அரசின் மீது பழியை போட்டு, பா.ஜ.க. இருக்கும் வரை படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இயலாது என்று தான் தெரிவித்ததாக மாற்றி பேசி, குன்னூர் ஜெகதளா அரசு பள்ளியில் தான் பலர் முன்னிலையில் பேசிய பேச்சினை மறுக்கிறார் அமைச்சர் ராமச்சந்திரன்.

பா.ஜ.க. பாடுபடும்

தி.மு.க. அரசின் பொய்யுரைகள் மக்களை எரிச்சல்படுத்தி அடுத்த முறை பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்தி புதுச்சேரியில் நடந்ததை தமிழகத்திலும் நடத்திக்காட்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. படுகர் இன மக்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளையும் பா.ஜ.க. சந்தித்து பேசியிருக்கிறது. ஒரு தரப்பினரை டெல்லியில் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவும் வைத்திருக்கிறது.

பழங்குடியினர் சமுதாயத்தில் முக்கியமான பல பிரிவினர் பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணி ஆட்சியில், அதிகாரமும் பதவியும் இருந்தும் செய்ய மனமின்றி ஒதுக்கப்பட்ட தமிழக பழங்குடியின மக்களுக்காக, அவர்களுடைய கோரிக்கைகள் விரைவில் நிறைவேற தமிழக பா.ஜ.க. தொடர்ந்து பாடுபடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story